மகாகவி பாரதியாரின் கட்டுரைகள்

கருணை
(சென்னை மாணவர் தமிழ்ச் சங்கத்து வருஷாந்திர மீட்டிங்கில்
மிஸ்டர் சி. சுப்பிரமணிய பாரதி செய்த பிரசங்கம்)

கருணையானது மானுஷிகக் கருணை, தெய்வீகக் கருணை என்றிரு வகைப்படும். இவை யிரண்டும் மனிதர்களிடத்துக் காணப்படுவனவே யாம். இவற்றுள்ளே தெய்வீகக் கருணை ஹயடையார் மனிதர்களுக்குள்ளே தேவர்களாவார். அஃதில்லாது மானுஷிகக் கருணை மட்டுமுடையோர் சாதாரண மனிதர்களாவார். அம் மானுஷிகக் கருணையில்லாதாரோ வெனில், இரு கால் விலங்குகளாவார்.

மானுஷிகக் கருணை, தெய்விகக் கருணை என்று பகுத்து, அவற்றைப் பற்றி மேலே பற்பல விஷயங்கள் சொல்லிக்கொண்டு போகுமுன், மானுஷிகக் கருணையாவது யாது? தெய்விகக் கருணையாவது யாது? என்பதை விளங்கக் கூறியிருத்தல் வேண்டும்.

முதலாவது மானுஷிகக் கருணை யென்பதை யெடுத்துக் கொள்வோம். அதமாவது ஒருவன் மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுள்ளவனா யிருப்பானாயின், அவனுக்கு மற்ற மனிதர்களிடத்திலும் பொதுவாக மற்றெல்லா உயிர்களிடத்திலும் இயற்கையாக இருக்க வேண்டியது உயர்தரத் தன்பு.

அன்பின் உயர்தரத் தென்பது வேறுபடுத்திச் சொல்லியதென்ன வென்றால் கூறுகின்றேன். மனிதனுக்குத் தென் மகனிடத்திலும், அரபிக்கு தன் குதிரையிடத்திலும், அரசனுக்குத் தனது அடிமையிடத்திலும், நோயாளிக்குத் தன் வைத்தியனிடத்திலும், வைத்தியனுக்குத் தனக்குப் பணம் கொடுக்கும் நோயாளியிடத்திலும், ஆண் சிங்கத்திற்குப் பெண் சிங்கத்தினிடத்திலும், தாய்ப் புலிக்குப் புலிக்குட்டியிடத்திலும், இன்னும் பலவாறாகவும் தோன்றுகிற அன்பு சாதாரண அன்பாகும். இவை உயர்தர அன்பு அல்லது கருணை என்று கூறப்படுவதில்லை.

இவ்வித சாராரண அன்பெல்லாம் காதல், நன்றியறிவு, இயற்கைப் பற்று, தன்னயம் பாராட்டல் என்று பலப்பல பெயர்களாற் கூறப்படும். இவற்றுள்ளேயும் தாரதம்மியமுண்டு. தன்னயம் பாராட்டலினும் இயற்கைப்பற்று உயர்வானது; அதைக் காட்டிலும் நன்றியறிவு சிறந்தது; அதனிலும் காதல் மேற்பட்டது, எனினும் இவை யெல்லாம் உயர்தர அன்பாக மாட்டா. இவை யெல்லாம் மனிதனுக்க மட்டிலும் சிறப்பாக உள்ள குணங்களல்ல.

திருஷ்டாந்தமாகத் தன்னயம் பாராட்டாமல் இல்லாத ஜீவஜந்துவே கிடையாது. ஓரறிவுச் சிற்றுயிர்கள் முதல் மனிதன் வரையுள்ள எல்லா ஜந்துக்களுக்கும் தன்னயம் பாராட்டுங் குணமுண்டு. இயற்கைப் பற்று புலிக்குண்டு; கரடிக்குண்டு; அனேகமாய் எல்லா விலங்குகளுக்குமுண்டு. நன்றியறிவுக்கு நாய் பெயர் போனது. காதலுக்குப் பறவைகள் புகழ் பெற்றனவாகும். இவை யெல்லாம் உயர்தர அன்பாக மாட்டா.

கருணை யென்பது யானறிந்த மட்டிலும் மனிதனுக்கே விசேஷ குணமாகும். தான் தின்ன வேண்டுமென்று வைத்திருந்த உணவைத் தன்னிலும் பசி யுடையவனாக ஒருவன் வரக் கண்டவுடன் அவன் முகங் கண்டிரங்கி "தம்பி, உணவில்லாமல் இன்னும் சிறிது நேரம் யானுயிரோடிருக்க மாட்டுவன். நீ ஆகாரமில்லாவிடின், இப்பொழுதே இறந்து விடுவா யென்று தோன்றுகிறது. நீ இதை யெடுத்துக் கொள்" என்ற அவனிடம் கொடுத்து விடுகிறான். இது கருணை.

கன்னமுலர்ந்து போய்க் கண்கள் குழி விழுந்து, எண்ணெய் அறியாது புதர்பட்ட தலையும் ஸ்நாநமறியாத உடலும், கிழிந்த கந்தை யுடுத்த அரையுமாகிச் சோறு வேண்டுமென்று கேட்கவுமெண்ணாமல், மூலையில் இரண்டு குமாரத்திகள் படுத்திருக்க, நோயிலே வருந்தி வாயினால் நலிவு கூறிக் கண்ணால் பழி கூறிக்கொண்டு மனைவியொரு பக்கத்தில் விழுந்திருக்க, வெளியே பிச்சைக்கொன்று போன விள்ளைகள் எப்போது வருவார்களென்று அவர்க ளடிச் சத்தம் கேட்கும் பொருட்டு மேலெல்லாஞ் செவிகளாகக் காத்திருக்கும் வாத நோய் கொண்ட கிழவனொருவன், மக்கள் வருகிறார்களா என்று பார்க்கம் பொருட்டு நகர்ந்து நகர்ந்து வெளியே வந்து நோக்கும்போது, அங்கே ஓர் பசித்த நாயிருப்பது கண்டு, திரும்பவம் நகர்ந்து உள்ளே சென்று எந்த ஆச்சரியத்தாலே தாங்க ளுண்ணாமல் வைத்திருநத சிறிது பழஞ் சோற்றைக் கொண்டுவந்து அந் நாய்க்குப் போடுவதை நான் பார்த்திருக்கிறேன். இது உயர்தர அன்பு, இது காருணியம்.

போர்க்களத்திலே சிட்னி என்பவர் தாம் காயமுண்டு கிடந்தபோது மரண தாகமெடுக்க, தண்ணீர் தண்ணீர் என்று புலம்பிவிட்டுச் சிலர் கொண்டு வந்தபோது அருகே குற்றுயிரோடு கிடக்கும் போர் வீரனொருவன் அந் நீரை ஆவலுடன் பார்ப்பது கண்டு "அப்பா, அவனுடைய தாகம் என்னுடையதைக் காட்டிலும் பெரிது; இந்த ஜலத்தை அவனிடம் கொடுத்து விடுங்கள்" என்ற சொல்ல, மூச்சுப் போய்விட்டது, இது காருணியம்.

தன்னலம் பற்றிச் சொல்வதன்று. தன் மகன், தன் மகளென்பது பற்றி ஏற்படும் இயற்கைப் பயற்றன்று. செய்தததற்கு மாறு செய்யும் நன்றி யன்று. அன்புடன் முத்தமிட்டுத் தழுவி மகிழ்ந்திருந்த உடல் வருந்துகின்றபோது பொதங்கி யெழுகின்ற காதற் றுன்ப மன்று. இது கருணை. மனிதர்களுக்குள்ளே இக் கருணை யுணர்ச்சி மிகக் குறைவாக இருத்தல் பரிதபிக்கக்கூடிய விஷயமாகும்.

தன்னயங்க கருதல், பொய், பொறாமை, சினம், கர்வம் முதலிய துர்க்குணங்களே பெரும்பாலும் மனிதர்களை ஆளுகின்றன என்பதை நாம் அறிய மாட்தோமா? மனிதர்களின் புராதன சரித்திரத்தைப் பார்வை யிடுவோமானால் அவற்றில் நிறைந்து கிடக்கும் அநீதிகளுக்கோர் கணக்குண்டா?

நமது அறிய தேச சரித்திரங்களையும், ரோம், கிரீஸ் முதலிய நாடுகளின் புராதன வர்த்தமானங்களையும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ருஷியா, ஆஸ்திரியா முதலிய நவீன ராஜ்யங்களின் பழைய சமாசாரக்ளையும், எகிப்து நாட்டுப் பழமைகளையும், ஹிப்ரூக் கதைகளையும், அரபி தேசத்துக் காலக் குறிப்புகளையும் நோக்குவோமாயின், எளியோரை வலியோர்களும், யாதொன்று மறியாத பேதை ஜனங்களைக் கபடமும் துரப்புத்தியும், சுய லாபக் கருத்தும் உருவாகத் திரண்ட பாதகர்களும் துன்பப்படுத்தியதற் கோர் எல்லை யுண்டா? கொடுங்கோன் மன்னர்களும், வயிற்றைக் கடவுளாக வணங்கும் மதாசாரியர்களும், மந்திரிகளும், ராஜ்ய தந்திரிகளும் ஏழை ஜனங்களைப் படுத்திய பாடு சொல்லவும் படுமா?
சகோதரர்களே! கருணை யென்பது இவ்வுலகத்தில் மிகவும் குறைவு புராதன சரித்திரத்திலிருந்து ஸிட்னி யென்ற ஒருவரை உதாரணமாக எடுத்துக் காட்டினோம். இவ்வாறு எத்தனை ஸிடனிக் ளிருந்திருக்கிறார்கள்?

ஆனாலோ பிணங்களை முன்னாலே பரப்பிக் கொண்டே அதன் பின்பு சேனைகளை நடத்திச் செல்கின்ற டைமர் போன்றோர்களும், நகர முழுவதும் தீயைக் கொளுத்தும்படி ஆக்கினை புரிந்துவிட்டுத் தீயிலே இளங் கன்னிகளும், மழலை மாறாக் குழந்தைகளும், கண்தெரியாக் கிழவர்களும் கிடந்து புழுத் துடிப்பதுபோலத் துடிடிப்பதை மாளிகைச் சிகரத்தின் மேலிருந்துப் பார்த்துக் களிக் கூத்தாடுகின்ற நீரோ சக்ரவர்த்தி போன்றோர்களும், 'என் வயிற்று வலியை எந்த மதத்தின் ஆசாரியர்கள் சொஸ்தம் செய்கிறார்களோ, அவர்கள் மதமே மேலானது. எதிரி மதஸ்தர்களை யெல்லாம் கழுவேற்றி விடுவோன்' என்ற போர் மூட்டிவிட்டு, தனது குன்ம நோயைச் சொஸ்தம் புரிந்த சைவர்களுக்குப் பரிந்து 8000 சமணர்களைக் கழுவேற்றிய பாண்டிய ராஜன் போன்றோர்களும் சரித்திரங்களில் மொய்த்துக் கிடக்கின்றார்கள்.

சரித்திரங்களில், கருணைக்காகப் புகழ் பெற்றவர்கள் ஆயிரத்திலொருவர். பாதகர்களோ எண்ணிறந்தவர்கள். உலகப் புகழிலோங்கி, செல்வத்திற் செருக்கி, பொன்னும் முத்தும் வயிரமுமணிந்து பல்லக்கிலேறிச் சுற்றும் பெரும் பதவிகளிலே மானிடப் புலிகள், மானிடப் பாம்புகள், மானிடப் பிசாசுகள், மானிட ராக்ஷதர்க ளிருந்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நாம் இப்போது பேச வேண்டியதில்லை. கருணையைப் பற்றிப் பேசவந்த இடத்தில் நாம் சிலரிடம் மாற்சரியம் காட்டுதல் அழகாக மாட்டாது. இவர்களை யெல்லாம் நாம் மறந்துவிட்டுப் புராதன சரித்திரக்ளிலேயும், தற்காலச் சரித்திரங்களிலேயும் கருணை வடிவுடையோரா யிருக்கும் பெரியோர்களின் வழக்கத்தைக் கைக்கொள்வோம்.

இதுவரை மானுஷிகக் கருணையைப் பற்றிப் பேசி வந்தேன். இனித் தெய்வக் கருணையின் தன்மை கூறுகின்றேன்.

தெய்வங்களால் மானிடர் மீது செலுத்தப்படுங் கருணையைத் தெய்விகக் கருணை யென்று கூறவில்லை. இங்கு அதனைப் பிரஷ்தாபிக்க இடமுமில்லை. தொடக்கத்தில் யான் கூறியபடி இத் தெய்வீகக் கருணையும் மனிதர்களிடமே யிள்ளது.மனிதரிடமுள்ள குணமொன்றுக்குத் தெய்வீக மென்ற பெயர் ஏன் கொடுக்க வேண்டும் என்றால், சொல்கின்றேன். மானுஷிகக் கருணை யென்ற ஒரு குணத்தைப் பற்றிக் கூறி வந்த யான் அதனிலும் கோடி மடங்கு சிறந்ததாகிய ஓர் பெருங் குணத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிய காலத்து அதற்கோர் பெயர் கொடுக்க வேண்டுவது அவசியமாதலால், அதனைத் தெய்விகக் கருணை யென்ற சிறப்புப் பெயராற் கூறினேன்.
இனி வேறு காரணங்களு மிருக்கின்றன; அவற்றைப் பின்பு பெளியிடுகின்றேன். இத் தெய்பிகக் கருணை யென்னும் அரிய பொருள் யாது? இதுவரை கூறி வந்த தன்னலம், இயற்கைப் பற்று, நன்றியறிவு, காதல், மானுஷிகக் கருணை என்பவற்றினின்றும் எவ்வாறு வேறுபட்டது? எனிற் கூறுவேன்,

ஏழைகள், நாதனற்றிருப்போர் இவர்களின் மீது செலுத்துவது மானுஷிகக் கருணை; உனக்குத் தீங்கு செய்வோர், உன் மனத்தைப் புண்படுத்துவோர், உன் பொருளை யழிப்போர், உன்னை நிந்திப்போர் - இவர்கள் மீது செலுத்தப்படுங் கருணை தெய்விகக் கருணை. இது சாதாரண மனிதர்களிடம் இராது. எல்லா மனிதர்களிடமும் இவ்விதக் கருணை இருக்குமாயின் உலகத்துக்கு கேடே விளையு மென்று சிலர் சொல்வார்கள். ஆனால் இவர்கள் சொல்வது வெறுங்க கதை. கோடி ஜனங்களில் ஒரு மகாத்மாவுக்குக் கூட இல்லாத இப் பெருங்குணம் உலகமெங்கும் பரவின், அதிகக் கெடுதியுண்டாய் விடுமென்று இவர்கள் அஞ்சுவது அநாவசியமாயிருக்கின்றது. தவிரவும், அந்தக் கருத்தே பிழை பட்டது. தெய்விகக் கருணை யிடைமையினால் உடையோனுக்கே சில தீங்குகள் விளையுமல்லாத உலகத்துக்கு நன்மைதான் உண்டாகும்.

அம் மகானோ தீமையைக் கருதாதோன். எனவே, கேடொன்றுமிலது. நான் இவ் விஷயமாக என் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் என்னிடம் "இதென்ன, அசம்பாவிதமாயிருக்கின்றது என் வீட்டை ஒருவன் தீயிட்டுக் கொளுத்தும்போது நான் அவனைத் தண்டனை புரியாமல் நன்மை செய்து வருவேனேயானால் அவன் இன்னும் பத்து வீட்டில் தீபோற்சவம் செய்து பார்ப்பா னல்லவா?" என்று பலப்பல திருஷ்டாந்தங்கள் கூறி நகைத்தனர். அவர்க்கும் அவர் போன்றோர்க்கும் நான் சொல்கிறேன். இப் பெருங்குணம் நும் போன்றவர்களுக் கேற்பட்ட தன்று. இது சொல்லி வரக் கூடியதன்று. இயற்கையாக வரவேண்டியது. புஷ்பத்தில் தேனும், கூரியனில் பிரகாசமும, குயில் வாயில் செவி யுருக்கும் இசையும் எவ்வாறு இயற்கையாக அமைந்திருக்கின்றதோ அதுபோலவே மகான்கள் சிலரிடம் ஸ்ரீ கிறிஸ்தர் முதலிய புண்ணிய புருஷர்க ளெல்லாம் இப் பெருங்குணம் வாய்ந்தோர்கள். அவர்களுக்கு ஒருவர் சொல்லிக் கொடுத்து வந்ததன்று. அவர்களின் தெய்விகக் கருணையைப் பார்த்துவிட்டு அக்காலத்து ஜனங்கள் "இவர்கள் மனிதர்களல்லர், தெய்வங்க"ளென்றே கருதினர். இக்காலத்திலும் எத்தனையோ ஜனங்கள் அவ்வாறே நினக்கிறார்கள். ஆம், இவர்கள் தெய்விக இயற்கையுடையோர் என்பதில் என்ன ஆஷேபமிருக்கின்றது? கடவுள் ஒருவன் இருப்பனே யாயின், அவன் இம் மகான்களுடைய தன்மை கொண்டே யிருத்தல் வேண்டும்.

கிறிஸ்துவுக்கு முன்முடி தரித்துச் சிலுவையிலேற்றி அங்கந் தோறும் ஆணியறைந்து, மேலெல்லாங் காறியுமிழும்போது, அவர் "எனது பிதாவே! இவர்கள் அறியாது செய்கின்றார்கள். இவர்களை மன்னித்தருளும்" என்று சொல்லிவிட்டு இறந்து போயினர். ஸ்ரீ புத்தநாதருடைய கருணை கடலுக்கே யொப்பாகும். "உன்னைத் தீண்டும் அரவையும் கொல்லாதே" என்பது இம் மகான் வாக்கியம்.
உலகத்திலே இருக்கும் துன்பங்களை யெல்லாம் பார்த்துவிட்டுச் 'சிச்சீ'! நான் அரசாளுவோனோ? நான் சிங்காதனத்திலிருப்பேனோ? அதிசுந்தரமுள்ள மாதர்கள் கவரி வீச திலோத்தமைகள் போன்ற நாட்டியக் கணிகையர் நடனம் புரிவதை நான் பார்த்க கொண்டிருக்கும்போது, தெருவிலே சாக்கடையோரத்தில் குஷ்ட நோய் கொண்ட ஒருவன் சோறின்றி மூச்சு வாங்குவதை நான் சகிப்பேனா?" என்ற புத்த பெருமான் யோசனை புரிந்தார். தனது ஆசைக் காதலியையும், சிறு குழந்தையையும், செல்வத்தையும், சிறப்பையும், அரண்மனையையும், பூஞ்சோலையையும் விட்டுவிட்டுப் புலியைக் கண்டோடும் மான்போல ஓடி வந்துவிட்டார்.

இவ் வுலகத்தில் இத்தனை துமை யிருக்கின்றதே, இத்தனைக்கும் நிவாரண மென்ன? என்ற புத்தர் மனதினுள்ளே ஆராய்ந்தார். பிராமண ஞானிகளிடம் போய்க் கேட்டார். அவர்கள் "நூறே நூறு வெள்ளாடுகளைக் கத்தியில்லாமல் கோன்று பாகம் (சமையல்) செய்து வபையை யெடுத்து அக்னியிலே ஆஹுதி பண்ணி நாமும் கொஞ்சம் சாப்பிட்டு விடுவோமாயின் இந்திர லோகத்துக்குப் போய் விடுவோம். பிறக பூலோகத் துன்பமின்றி யிருக்கலாம்" என்றார்கள்.

"இந்திர லோகத்திலே நாம் போனால் சர்வ ஜனங்களுக்கும் துக்கம் நீங்கிவிடச் செய்யலாமா?" என்றார் புத்தர்.

"சர்வ ஜனங்களோ, அவர்களெல்லாம் பாவத்துக்குத் தக்கபடி நரகாதிகளிலே அனுபவிப்பார்கள். ஜகத்திலேயும் துன்பப் படுவார்கள். யாகம் புரிந்த நாம் சுவர்க்கத்திலே, அமிருத பானம் புரிந்துவிட்டு, நரை, திரை, மூப்பு, மரணம் என்பன யாவுமின்றித் தேவ கன்னிகைகள் சகிதமாக எப்போதும் இளமை நீங்காது ரமிக்கலாம்" என்றனர், பார்ப்பனக் குருக்கள். 'சிச்சீ! நாம் மனிதர்களையும், நடனத்தையும், இளமையையும் சுகத்தையும் இகழ்ந்து தள்ளிவிட்டு உலகமனைத்தும் இன்பம் கொண்டிருக்க வழி யென்ன?' வென்று கேட்க, அதற்கு விடை சொல்லாமல் இவர்கள் ஏதேதோ கூறுகின்றார்கள். 'நாம் தேடி வந்த சரக்கு இந்தக் கடையிலே அகப்படா'தென்று எண்ணி அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

புத்தநாதர் பிறகு எங்கெங் கெல்லாமோ சுற்றி அயர்ந்துபோய் கயா ஷேத்திரத்தருகே யுள்ள ஓர் வனத்தில் போதி விருக்ஷத்தருகே போய்க களைத்து உட்கார்ந்தார். திடீரென ஓர் யோசனை தோன்றிற்று. இரகசியத்தைக் கண்டு விட்டார்; மோஷோபாயம் அவருக்குத் தெரிந்து விட்டது. ஆனந்த ஸாகரத்தி லமிழ்ந்து விட்டார். அஃது என்ன உபாயம்? அவருக்கு எந்த ஞானம் உண்டாயிற்று? அரசு நிலையைத் தூவென்று துப்பி வந்து பிச்சைக்காரராகத் திரிந்த கௌதம சாக்கியர் எவ்வாறு புத்தராய் விட்டார்? அத்தனை உயர்ந்த தெய்வ ரகசியம் அவருக்கென்ன புலப்பட்டு விட்டது?

பூலோகத்திலுள்ள மானிடர் அனைவரும் தயர் நீங்கி யிருப்பதற்கு வழி கருணை என்று அவர் அறிந்துவிட்டார். :Love, Universal Love. "காதல்", "கருணை", "ஸார்விகக் கருணை", "தெய்விகக் கருணை". இஃதே மானிடர் உடலையும், மனத்தையும், அறிவையும், ஆன்மாவையும் பற்றிய நோய்களுக் கெல்லாம் மருந்தென்று புத்தர் கண்டார்.

நண்பர்களே, இத் தெய்விகக் கருணையின் பெருமையை என்றால் அளவிட்டுரைக்க முடியாது. அதைப் பற்றி விவாதம் செய்யாதே; பேசாதே; நகையாதே; செய்துபார். அதன் இயற்கை தெரியும்.

உனக்குத் தீயன செட்யது வருவோனுக்கு நீ நல்லன செய்து வா.
நீ உடனே மகானாகி விடுகின்றாய்; உடனே தெய்வமாகி விடுகின்றாய்.

என்னால் வருணிக்க முடியாததும் எனது வணக்கத்திற்குரியதுமான பொருளாய் விடுகின்றாய்.

(சென்னை பிரசிடென்சி காலேஜ் தமிழ்ச் சங்கத்தில் பாரதி ஆற்றிய சொற்பொழிவே இங்குக் கட்டுரையாக இடம் பெறுகின்றது. பாரதி முதன் முதலாக மேடையேறிப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதைக் கருணை எனகிற கட்டுரை வாயிலாக ஆதார பூர்வமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாரதி பெயரால் சுதேச மித்திரன் இதழை அணி செய்யும் முதல் படைப்பு கருணை என்னம் தலைப்பிலான வசனம் எப்தையும் நம்மால் கண்டுணர முடிகிறது)

நன்றி: திரு.சீனி. விஸ்வநாதன் (பாரதி படைப்புகளை காலவரிசையில் தொகுத்தவர்) 
Website Designed by Bharathi Sangam, Thanjavur