மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
2

“கேசவா! உம்மிடத்தில் ஒரு சிறு தவறு சொல்லிவிட்டேன். பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், யார் என்று கேட்டார். தமிழில் பதில் சொல்லியிருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.”

“அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா. அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை” என்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று.

“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை.

அப்பொழுது அவர் பாடிய பாட்டு, மறவன் பாட்டு என்று பாடியிருக்கிறாரே, அதுதான். அவர் பாட்டும் குரலும் என் உள்ளத்தைக் கவர்ந்தன. என் நினைப்பும் என்னிடத்தில் இல்லை. என் மனம் என்னை விட்டு அகன்றே போயிற்று எனலாம். அன்றைக்குத்தான் யோகம் என்பது இன்னதென்று கண்டேன். என்னுடைய மயக்கம் ஒருவாறு தெளிந்தது. எனது உள்ளப் பூரிப்பைப் பாரதியார் கண்டுகொண்டார்; நாட்டின் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்

“நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்...” இவ்வாறு அடுக்கிக்கொண்டே போனார். வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்போழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியாரிடந்தான். தமிழுக்கு உயர்வு உண்டு; தமிழனுக்கும் பெருமை உண்டு என்பதை பாரதியாரைப் பார்த்த பின்னர்தான் என் மனத்தில் அழுத்தமாய்ப் பதிந்தது. வெறும் வந்தேமாதரக் கூச்சலிட்டு வந்த சிறு பிள்ளையான எனக்கு, பாரதியாரைக் கண்ட பின்னர் அபரிமிதமான உற்சாகம் வந்தது என்றால், அது கற்பனையே அல்ல.

“தேமதுரத் தமிழ்” ஓசையை, அன்று நான் நேரே கண்டு அனுபவித்தேன். நான் எந்த உலகத்தில் இருந்தேன் என்பதை என்னால் அறியக்கூடவில்லை. தமிழுக்கு உயிரும் உருவமும் வலிமையும் பொலிவும் மேன்மையும் உண்டென்று அன்றுதான் கண்டேன்.

“பாட்டு எப்படி இருக்கிறது?” என்று சாதாரண மனிதன் கேட்பது போல, பாரதியாரும் கேட்பாரோ என்று எண்ணினேன். பாட்டு நன்றாயிருக்கிறது என்று சொல்லவும் பயந்தேன். நான் இருந்த நிலைமையைப் பாரதியார் நன்றாக உணர்ந்துகொண்டார். இன்னும் சில பாட்டுகள் பாடினார். என் பாக்கியத்தை நான் அளவிட்டுச் சொல்ல முடியாது.

கடல்மடை திறந்துவிட்டது போல, ஓயாமல் பாட்டுகள் வந்துகொண்டேயிருந்தன. நானும் பரவசமானேன். பாரதியார் பாட்டையும் நிறுத்தினார். பிறகு, ஸ்நானமும் சாப்பாடும் முடிந்தன.

பிற்பகலில், சுமார் நான்கு மணி அடித்திருக்கும். “வெளியே போவோம் வாரும்” என்றார் பாரதியார். வெளியே புறப்பட்டுப் போனோம்; சிறிது தூரத்துக்கெல்லாம், ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம். “பாரதி, வாரும்” என்று இனிய குரலில், ஒருவர் எங்களை வரவேற்றதைக் கேட்டேன். அந்த வீடு சீனிவாஸாச்சாரியார் இருந்த வீடு.

“இந்த நண்பர் அந்த முரடனைப் பார்க்க வேண்டுமாம்” என்றார் பாரதியார். முரடன் என்று குறிப்பிட்டது அரவிந்தரை என்று தெரிந்துகொண்டேன். "எவ்வளவு கஷ்டங்களுக்கு உள்ளாகியும், புதுச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்தும் இந்தச் தேச பக்தர்களின் கேலியும் நகைப்பும் ஒழிந்தபாடில்லை. போய்க் கேட்போம்; பிறகு நடக்கிறது போல நடக்கட்டும்” என்றார் சீனிவாஸாச்சாரியார்.

அரவிந்தரின் முக்கிய குணம் முரட்டுத்தனம் என்று இவர்களுடைய பேச்சினின்றும் வெளியாயிற்று. “அவ்வளவு கஷ்டமாயிருந்தால் வேண்டாம்” என்றேன். “இந்தப் புத்தி உமக்கு ஊரிலேயே வந்திருந்தால் புதுச்சேரிக்கு வந்த பணம் மீதமாயிருக்குமே” என்று சிரித்துக்கொண்டே சொன்னார் பாரதியார். எனக்கு முன்னும் ஓடவில்லை, பின்னும் ஓடவில்லை. மௌனந்தான் எல்லாக் காரியங்களுக்கும் சாதகம் என்று எண்ணி, சும்மா உட்கார்ந்துகொண்டிருந்தேன்.

சற்று நேரம் பொறுத்து, மூன்று பேரும் வீட்டை விட்டு வெளியேறினோம். பாரதியாரிடம் முக்கியமான குணமொன்றைக் கவனித்தேன். பேசினால் பேசிக்கொண்டிருப்பார். பேச்சு ஓய்ந்ததானால், உடனே பாட்டில் பாய்ந்துவிடுவார். மௌனம் அபூர்வம். யார் பக்கத்திலே இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவரிடம் இருக்காது போலிருக்கிறது. நடக்கும்போதும் பாட்டுதான்.

போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்கு கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார். சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்றுவிடுவார். ஆனால், பேசினவர் எல்லோரும் பாரதியாருக்குக் காண்பித்த மரியாதை அளவு கடந்ததாயிருந்தது.

ஏழை பாரதியாருக்கு எப்படி இவ்வளவு மரியாதை கிடைத்தது என்பது அப்போது சிறிதும் விளங்கவேயில்லை. பாரதியாருடைய பாட்டின் மகிமையை அவர்கள் தெரிந்துகொண்டு கும்பிட்டார்களா என்பது சந்தேகம். ஆனால், புதுச்சேரியில் பலருக்குப் பாரதியார் குருவாக விளங்கினார் என்பது உண்மை.

சீமான் சங்கர செட்டியார் வீட்டுக்குப் போனோம். என்னைத் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு, அவர்களிருவரும் உள்ளே போனார்கள். போய்வருவதற்குக் கொஞ்சம் நாழிகையாகியிருக்கும் போலிருக்கிறது. நான் திண்ணையில் படுத்துக்கொண்டு தூங்கிப்போனேன். அவ்வளவு ஆவலுடன் புதுச்சேரிக்குப் போன எனக்கு அந்தச் சமயம் தூக்கம் வந்ததன் காரணம் இன்னதென்று இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை. பாரதியார் என்னைத் தட்டி எழுப்பினபோதுதான் எனக்குத் தெரியும். செட்டியாரின் வீட்டு மூன்றாவது மாடிக்குப் போனோம்.

ஒரு மூலையில், ஒதுக்குப் புறத்தில், அரவிந்தர் தன்னந்தனியே உட்கார்ந்துகொண்டிருந்தார். அரவிந்தரை நமஸ்கரித்துவிட்டு நாங்களும் உட்கார்ந்தோம். பேச்சை யாரும் தொடங்கவில்லை. பாரதியார் சட்டென்று எனக்குத் துணைபுரிந்தார்.

“தமிழ்நாட்டுத் தேச பக்தன்” என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்துவைத்தார். “சர்க்காருக்கு மனுப்பண்ணிக்கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான். பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை. “அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலை நிமிர்ந்துகொள்வதற்கு எனக்குத் தைரியம் உண்டாயிற்று.

பாரதியார் உயரத்தில் பெரியவர்; அரவிந்தவர் உருவத்தில் சிறியவர். பாரதியார் ஸங்ககோசி; அரவிந்தரும் ஸங்கோசிதான். பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை; அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை. இருவருக்கம் புதிய புதிய கருத்துக்களும் சித்திரச் சொற்களும் திடீர்த் திடீரென்று புதைவாணங்களைபோலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்து வந்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் துளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார். இருவர் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார். இதோடு பாதியாரை நான் சந்தித்த கதையை நிறுத்திக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லுகிறேன். கேசவா! என்ன சொல்லுகீறீர்? என்றேன். “பூரண சம்மதம்” என்றார் நண்பர்.

                 
2

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur