மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
5

படிப்புக்கு ஓர் உதை; காசிக்கு ஒரு கும்பிடு; கங்கையிலே கடைசி முழுக்கு. பாரதியார் எட்டயபுரத்துக்கு வந்து சேர்ந்தார். காசியிலிருந்து எட்டயபுரத்துக்கு வர, வழிப் பிரயாணச் செலவுக்கு யார் பாரதியாருக்கு பணம் கொடுத்தார்களோ! அனேகமாய் ஜமீன்தார் அவர்கள்தான் கொடுத்திருக்க வேண்டும். காசிக்கு ஜமீன்தார் கடிதம் எழுதியதின்பேரிலேதான் தாம் எட்டயபுரத்துக்கு வந்ததாகப் பாரதியார் சொல்வதுண்டு.

ஜமீன்தாருக்கும் பாரதியாருக்கும் ஒரு வினோதமான நட்பு. இருவரும் சேர்ந்திருந்தால் சண்டை; பிரிந்திருப்பின் பிரிவு ஆற்றாமை. இந்த விசித்திரக் காட்சியை, தற்போதுள்ள சினிமா நடிகக் காதலர்களுக்குள்ளேதான் காண முடியும். ஜமீன்தாருக்குத் தமது செல்வத்திலும் செல்வாக்கிலும் பெருமை. பாரதியாருக்குத் தாம் பாரதியார் என்ற உணர்ச்சிப் பெருமை. ஒருவர் மற்றவரைப் பெரியவர் என்று கொண்டாடி வணங்க முடியுமா?

தனவந்தரின் தயவு சுழற்காற்றைப் போலச் சுற்றிக் கொண்டேயிருந்கும்; ஒரே இடத்தில் ஒரே மனிதனிடம் நீண்ட காலம் தரித்திருக்காது. பாரதியார் வரும் வரையிலேதான், ராஜாவுக்கு ஆத்திரமும் அன்பும். நேரில் அவரைப் பார்த்ததும் தாம் 'ராஜா' என்ற எண்ணம். இந்தத் தொல்லைக்கு என்ன செய்கிறது? பாரதியார் வந்ததும் அவருக்கு வேலையில்லலாத உத்தியோகம்! ஆனால் சம்பளம் உண்டு. இவ்வளவு என்று தஸ்தாவேஜில் குறிப்பிடப்படவில்லை; ராஜாவின் தயவு இருக்கும் வரையில் சம்பளத்துக்கு பயமில்லை. ஆனால் பெரிய இடத்துத் தயவைப் பற்றித்தான் சந்தேகம். அதைத் திட்டமாய்ச் சொல்ல முடியாது.

ஜமீன்தாரின் உறுதியற்ற மனத்தைப்பற்றி, பாரதியார் சின்னச்சங்கரன் கதையில் நன்றாக வர்ணித்திருக்கிறார். "ராக்கப்பிள்ளைக்கு நிலம் கொடுக்கவும்" என்று மொட்டையாக ஓர் உத்தரவு போடுவாராம் ராஜா. எந்த ராக்கப்பிள்ளை? எவ்விடத்தில் நிலம்கொடுக்கிறது? நிலம் எவ்வளவு கொடுக்கிறது? நஞ்சையா புஞ்சையா, வீடு கட்ட நிலமா என்ற விவரமே தெரியாதாம்! உத்தரவின் அர்த்தத்தை விளக்கமாகத் தெரிந்துகொள்வதற்காக, அரண்மனை காரிய நிர்வாகிகள், ஜமீன்தாரைக் கிட்ட அணுக அஞ்சுவார்களாம்! எனவே, அவர்கள் தங்கள் இஷ்டப்படி உத்தரவை நிறைவேற்றி வைப்பார்களாம்! கேள்விமுறை இல்லாத கண்மூடித் தர்பார் என்பார் பாரதியார்.

“இந்தக் கண்மூடி ராஜ்யத்தில் தான் எப்படிக் காலந்தள்ள முடியும்!” என்று பரிதாபத்துடன் பாரதியார் கேட்கும்பொழுது, மற்றவர்கள் என்ன பதில் சொல்ல முடியும்? தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி கிடையாது. இக்காலத்து வாழ்வைப்பற்றி, பாரதியார் சிறிதளவு, சமயம் நேர்ந்தபொழுது, சொல்லுவதுண்டு.

‘கூளப்ப நாயக்கன் காதல்’ என்ற நூலிலே ராஜாவுக்கு ரொம்பப் பிரியமாம்! அதை அவர் படிக்கக் கேட்டு மகிழ்வாராம்! (இந்தச் சம்பவம் “சின்னச் சங்கரன் கதை”யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.) சிங்கார ரஸம் ததும்பும் பாட்டுகளிலும், நாட்டியக் கச்சேரிகளிலும் ராஜாவுக்கு அளவு கடந்த மோகமாம்! காதலைப் பற்றி ராஜா புலம்புவாராம்! பிரசங்கம் செய்வராராம்! இவற்றையெல்லாம் பாரதியார் கேட்டுக்கொண்டிருக்க வேண்டுமாம்! “ராஜாவின் சிங்கார ரஸப் பேச்சு என்னைப் பலவீனப்படுத்தியதும் பயமுறுத்தியதும்போல, வெள்ளைக்காரர்களின் சட்டங்கூடச் செய்ததில்லை” என்று பாரதியார் அடிக்கடி சொல்வதுண்டு.

ராஜாவின் சிங்காரம், அவருடைய நிலையில்லாத தயவு, வேலையில்லாத உத்தியோகம், சிப்பந்திகளின் அற்பப் பொறாமை, குடும்பம், பாரதியாரின் உள்ளத்தின் தனிப்போக்கு – இவை யாவும் சேர்ந்து கொண்டன. முடிவு என்ன? எட்டயபுரத்தைவிட்டு வெளியேற, பாரதியார் தீர்மானங்ககொண்டார்.

ராஜாவின் மனம் உறுதியற்றது என்றால், அதைக் காட்டிலும் அதிகமாகப் பாரதியாரின் மனம் நிலையற்றது போலத் தோன்றுகிறதே என்று சிலர் சந்தேகப்படலாம். பெரியவர்களின் வாழ்விலே, இத்தகைய நிகழ்ச்சி மிகச் சாதாரணமாகும். தங்கள் ஆத்மவேகத்துக்கு உவப்பான வேலை கண்ணில் தோன்றும் வரையில் அவர்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குத் திடீர் திடீர் என்று மாறுவார்கள். அதுவரையிலும் அவர்களுக்குச் சஞ்சலந்தான்.

சத்தியாக்கிரக உபாயத்தைக் காணும் வரையில் காந்திக்குச் சஞ்சலம். ஆத்ம சம்பந்தமான தன்னிலையை அறியும் வரையில் புத்தன் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. விவேகானந்தரின் உள்ளம் அமைதி பெறும் வரையில் பட்ட கஷ்டத்தை எழுத்துக்குள் அடக்க முடியாது. சுவாமி ராமதீர்த்தரின் கதியும் இதுவேயாகும். ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிடிப்பு ஏற்படும் வரையில், நிலையற்ற மனம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை.

சமஸ்தானத்தை விட்டால் குடித்தனத்துக்கு வழி என்ன என்ற சிந்தனை செய்தார் பாரதியார். பிடித்திருக்கும் கொம்பை விட்டாலொழிய, குரங்கு வேறு கொம்புக்குத் தாவி, அதைப் பிடிக்க முடியாது என்று பாரதியார் கேலி செய்வார். ‘பழைய கொம்பு கை நழுவி புதுக்கொம்பும் அகப்படாவிட்டால், -குரங்கு என்ன செய்யும்?’ என்று யாரேனும் கேட்கத் துணிந்தால், “கீழே விழுந்து மண்டை உடைந்து இறக்க வேண்டியதுதான். அதற்குப் பயப்பட்டுப் பயனில்லை” என்று பாரதியார் படீர் என்று முடித்துவிடுவார். ஆனால், பாரதியாரின் உபமானக் குரங்கின் கதி அவருக்கு நேரவில்லை.

பாண்டி நாட்டுக்குத் தலைநகரான மதுரையில் சேதுபதி உயர்தரப் பள்ளிக்கூடத்தில் இந்தச் சமயத்தில் தமிழ்ப் பண்டிதர் வேலை காலியாயிற்று. அந்த வேலை பாரதியாருக்குக் கிடைத்தது. பாரதியார் மனுப் பண்ணிக் கொண்டார் அல்லது எவரேனும் சிபாரிசு செய்து அங்கே பாதியாரைக் கொண்டுபோய்ச் சேர்த்தார்களா என்பதற்கு விவரம் அகப்படவில்லை.

பாரதியார் தமிழ்ப் பண்டிதர் வேலையில் அமருமுன், எட்டயபுரத்தில் அவருக்கு ஒரே ஒரு நண்பர்தான் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கம் உரியவராயிருந்தாராம். அந்த இளைஞர் அய்யங்காராம். சமஸ்தானத்து குமாஸ்தா, அந்த இளைஞரைப்பற்றிப் பேசுகையில் பாரதியார் கண்ணீர் விடுவார். சொற்ப சம்பளத்தில் குமாஸ்தா வேலை பார்த்துவந்த அந்த இளைஞர் மேதாவி என்றும், அவர் அபூர்வமான தமிழ் நாடகம் ஒன்று எழுதினார் என்றும், அது அச்சுக் வராமல் போனது பெரிய நஷ்டம் என்றும், பாரதியார் சொல்லுவார். அந்த இளைஞர் யாரோ, அவர் இப்பொழுது எங்கு உயிருடனிருக்கிறாரோ – இந்தச் சங்கதிகள் எனக்குத் தெரியா.

1901 அல்லது 1902இல் பாரதியார் தமிழ்ப் பண்டிதர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது என் உத்தேசம். 1903ஆம் ஆண்டு முடிவுக்குள்ளாகவே அவர் சென்னைக்குப் போய்விட்டார். ஒரு வருஷமோ ஒன்றரை வருஷமோ சேதுபதி பள்ளிக்கூடத்தில் பாரதியார் தங்கியிருந்ததாகத் தெரிய வருகிறது.

தமிழ்ப் பண்டிதர் பதவிக்குப் பாரதியாரிடமிருந்த லட்சணங்கள் வினோதமானவை. எட்டயபுர சமஸ்தான வித்வான்கள் அளித்த பாரதி என்ற பட்டமொன்றே முதல்தரமான லட்சணம் என்று எண்ணுகிறேன். தமிழ்ப் பண்டிதர்கள் நன்னூல் (இலக்கண) சூத்திரங்களைத் தலைகீழாய்ச் சொல்ல முடியுமே, அந்த சாமர்த்தியம் பாரதியாருக்குக் கொஞ்சங்கூடக் கிடையாது. நன்னூலை அவர் பார்த்திருப்பார் என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அதைப் படித்து நெட்டுருப் பண்ணியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.

“தோன்றல், திரிதல், கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ விடத்து மாகும்”

இந்தச் சூத்திரத்தைப் பாரதியார் எப்படியெல்லாமோ கேலி செய்வார். நன்னூல் தற்போது இருக்கிற நிலையில் பாரதியாருக்குத் துளிகூடப் பிடித்தம் இருந்ததில்லை. நன்னூலிலே இவவளவு வெறுப்புக்கொண்ட பாரதியார் எவ்வாறு தமிழ்ப் பண்டிதர் உத்தியோகம் பார்த்தார் என்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

வகுப்பிலே படித்த சில பையன்கள் பெரிய பையன்கள். பாரதியாருக்கு அப்பொழுது வயதும் அதிகமாக ஆகவில்லை. வாட்டசாட்டமான உடலும் அவருக்குக் கிடையாது. உடம்பிலே சக்தியும் அதிகமாகக் கிடையாது. இலக்கண அறிவும் பூஜ்யம் என்றே சொல்லலாம். தமிழ்ப் பண்டிதர் வேலை தமக்குச் சாசுவதமான தல்ல என்று அவரும் ஜபித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஊரும் புதிது. இந்த நிலைமையில் பாரதியார் தமிழ்ப் பண்டிதராய் எவ்வாறு காலந்தள்ளினாரோ!

இந்தச் சமயத்தில் சென்னையில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையை நடத்தி வந்த, காலஞ்சென்ற ஸ்ரீமான் சுப்பிரமணிய அய்யர் மதுரைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்பொழுது சுப்பிமணிய அய்யர் பாரதியாருக்கு அறிமுகமானார். பாரதியாரின் மேதையை அவர் உடனே தெரிந்துகொண்டார். உள்ளூர அவருக்கு ஆனந்தம். எப்படியாவது பாரதியாரைச் சென்னைக்குக் கொண்டு போய்விடுவது என்று அய்யர் தீர்மானங்கொண்டார்.

தமிழர்களை அரசியல் துறையில் கண் விழிக்கச் செய்த மகான் சுப்பிரமணிய அய்யர். அவரிடம் அற்பத்தனம் சிறிதும் இருந்ததில்லை. பாரதியாரின் மேதையை நேரில் கண்ட அய்யர், சென்னைக்கு வரும்படி பாரதியாரை வேண்டிக்கொண்டார். தற்காலத்துப் பத்திராதிபர்கள், தவிக்கும் மேதாவி ஆசிரியர்களுக்குத் தக்க பரிவு காண்பிப்பார்களோ என்பது சந்தேகம். அய்யர் அவர்களின் அரசியல் தொண்டையும், அவர் பாரதியாரிடம் காண்பித்த பரிவையும், அன்பையும் தமிழர்கள் ஒரு நாளும் மறக்க முடியாது.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். பாரதியார் பத்திரிகைத் தொழிலை மேற்கொண்டது ஊதியத்தின் பொருட்டா, அல்லது அவரது தேசபக்தி ஊக்கம் காரணமா? இதைப்பற்றி எனக்குச் சிறிதளவு சந்தேகமிருந்தது. 1904ஆம் வருஷத்திலிருந்து பாரதியாருக்கு நண்பராயிருந்து வந்த எஸ்.துரைசாமி அய்யர் அவர்களிடம் கேட்டேன்.

அவர் சொனனதாவது: “நமது நாட்டிலே பொதுவாகத் தேசபக்தி உணர்ச்சி தோன்றியது வங்காளப் பிரிவினையினால்தான். அக்காலத்தில் விபின சந்திர பாலரின் எழுத்தும், பிரசங்கமும் நம்மவர்களைப் பெரிதும் கலக்கி வந்தன. இது 1905ஆம் வருஷத்துக்குப் பின்னர். ஆனால் பாரதியோ (பாரதி என்றுதான் துரைசாமி அய்யர் சொல்லுவார்) 1904ஆம் வருஷத்திலேயே எனக்கு அரசியலில் தீவிர ஊக்கமும் உற்சாகமும் வரும்படி செய்தான். (நெருங்கிய நண்பர்களாதலால் செய்தான் என்று சொல்ல அவருக்குப் பாத்தியமுண்டு) பாரதியின் தேசபக்தி, கடன் வாங்கின சரக்கல்ல. அது அவனுடைய சொந்தச் சொத்து, தமிழ்நாடுதான் பாரதி. அப்படித்தான் எனக்குச் சொல்லத் தெரியும்”

இதைக்காட்டிலும் அதிகமாக வேறு யாரால் சொல்ல முடியும்?

                 
5

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur