மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
12

புதுச்சேரிக்கு ஒரு மைல் வடக்கே முத்தியாலுப்பேட்டை என்று ஓர் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் கிருஷ்ணசாமி செட்டியார் என்று ஓர் இளைஞர் இருந்தார். அவருக்குத்தான் வெல்லச்சுச் செட்டியார் என்ற அருமையான செல்லப் பெயரைப் பாரதியார் கொடுத்தது.

கிருஷ்ணசாமி செட்டியார் ரொம்பக் ‘குள்ளை’ நல்ல கெட்டியான, இரட்டை நாடி உடம்பு. அவரிடம் உடலிலோ மனத்திலோ சோர்வை ஒரு நாளும் பார்த்ததில்லை. அவருக்குச் செல்லப் பெயர் அமைந்தது, அவருடைய உடல் உறுதியின் காரணத்தினால்.

இந்த செட்டியருக்குத் தொழில், நெசவு. கொஞ்சம் பூஸ்தியும் பணமும் உண்டு. துணி வியாபாரமும் நடந்துகொண்டு வந்தது. அவர் அடிக்கடி பாரதியாரின் வீட்டுக்கு வந்துவிடுவார். எத்தனை நாழிகை வேண்டுமானாலும் மௌனமாய் உட்கார்ந்திருப்பார். முதலில் பாரதியாரை, ’ஸ்வாமி’ என்று கும்பிடுவதோடு சரி.

பாரதியாருக்கு அவரிடம் நிரம்பப் பிரியம். அவரிடம் தாம் பாடிய பாடல்களைப் பாடிக் காண்பிப்பதில் பாரதியாருக்கு நிரம்பத் திருப்தி. செட்டியாரின் முகத்தைப் பார்த்தால், அவர் ஓர் இலக்கிய ரஸிகரென்று தோன்றாது. அவருக்கு அப்பொழுது (1910 – 1911) வயது சுமார் இருபது இருக்கலாம்.

” இவரிடம் பாரதியார் வீணாக வாசித்துக் காண்பிக்கிறாரே!
” என்று எங்களில் சிலர் எண்ணியதுண்டு.

ஆனால், சிரிக்க வேண்டிய பகுதியில், எங்களுக்கு முன்னமே ’களுக்’ கென்று சிரித்துவிடுவார். சோக ரஸக் கட்டம் வ்ந்தால், செட்டியாரின் முகத்தைக் கண் கொண்டு பார்க்கமுடியாது. முகத்தில் உருக்கம் தாண்டவமாடும்.

பார்வையிலே நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதற்கு, கிருஷ்ணசாமி செட்டியாரை ஒர் உதாரணமாகப் பாதியார் அடிக்கடி சொல்லுவார். ”எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, யார் கண்டார்?” என்று பேச்சை முடித்துவிடுவார் பாரதியார்.

இம்மாதிரி சமயங்களில், பாரதியார் சில கதைகள் சொல்லுவார். அது பழைய கதைதான். நண்பர் செட்டியாருக்கு அதைப் பாரதியார் பிரயோகம் செய்ததால், அதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டு பேர், காட்டுப்பாதையாகப் போய்க் கொண்டிருந்தார்களாம். ஒருவர் குடியானவர். மற்றவர் செட்டியார். காட்டுப்பாதையில் திருடர் பயம் ஜாஸ்தி இருட்டுக்கு முன் காட்டைக் கடந்துவிடலாம் என்று இருவரும் பயணம் புறப்பட்டார்கள். ஏதோ அவகேட்டால், இருட்டிப் போனபிறகுதான் அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள்.

இந்தக் கட்டத்தில், ” ஏன் செட்டியாரே! கதை சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்தச் சமயம் திருடர்கள் வரலாமா, அல்லது கொஞ்ச தூரம் வழி நடந்து, சிறிது நேரம் ஆன பிறகு வரலாமா?” என்று பாரதியார் கேட்பார். ”எந்தச் சமயத்தில் வந்தாலென்ன? நான் பாரதியாரோடு வழிப்பிரயாணம் செய்கிற செட்டி எனக்கு என்ன பயம், என்ன அவமானம் ?” என்பார் செட்டியார். அச்சா அப்படிச் சொல்லப்பா, தங்கமே!” என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பார். நாங்கள் மட்டும் சிரிக்காமல் இருப்போமா?

திருடர்கள் குடியானவனை நையப் புடைத்து, அவனிடமிருந்ததைப் பிடுங்கிக் கொண்டனர். செட்டியார் (கதைச் செட்டியார் தான்) பார்த்தார்; பேச்சு மூச்சு இல்லாது படுத்துக்கொண்டார். திருடர்கள் செட்டியாரைக் கோலால் தட்டிப்பார்த்து, ’ கட்டைக் கிடக்கிறது’ என்றார்கள். ” உங்கள் வீட்டுக் கட்டை பத்து ரூபாய்ப் பணத்தை மடியில் கட்டிக் கொண்டிருக்குமோ?” என்றார் செட்டியார்.
” என்ன செட்டியாரே, சரிதானே கதை?” என்றார் பாரதியார். ” கதை எப்படி இருந்தாலும், அது இப்பொழுதுதான் முடிந்தது ” என்று மடியிலிருந்து பத்து ரூபாய்நோட்டை எடுத்துப் பாரதியாரிடம் கொடுப்பார் செட்டியார். ” கதையில் திருடர்கள்; நான் பகல் கொள்ளைக்காரன்” என்று சொல்லி, பாரதியார் கடகடவென்று சிரிப்பார். பாரதியார் சிரித்துகொண்டு இருப்பதை பார்ப்பதில் செட்டியாருக்குப் பிரமானந்தம். கண்கொட்ட மாட்டார். பாரதியாரின் முகத்தை அப்படியே அள்ளி விழுங்கி விடுவதை போல லயித்து போயிருப்பார். அத்தகையச் செட்டியாரிடம் தவிர, வேறு யாரிடமும் அவ்வளவாக நான் பார்த்ததில்லை.

என்ன ஆச்சரியம்! செட்டியாரைப் பார்த்தால் ஒன்றுமே தெரியாத, ஒன்றுமே விளங்காத அப்பாவியைப்போல இருப்பார். ஆனால், அவர் செய்கிற காரியமும், அபாரமாய் இருக்கும். பாரதியார் சொல்லிய கதையை, செட்டியார் எவ்வளவு நேர்த்தியான நகைச்சுவையுடன் முடித்தார் ! விளையாட்டுக்காக அவர் பாரதியாரிடம் அந்த ரூபாய்களைக் கொடுக்கவில்லை, பாரதியாரின் நிலைமையை அறிந்தே கொடுத்தார்.

பணங் கொடுக்கிற சங்கதியில், பாரதியாரோடு நிரம்ப ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவருடைய கையில் பணம் இருக்காது என்பது உண்மை. ஆனால், பிச்சைக்காரனுக்குப் பிச்சைப் போடுவதைப் போல நினைத்துக்கொண்டு எவரேனும் உதவி செய்ய முன்வந்தால், அவர்கள் பாரதியாரிடம் அவமானம் பட்டுப் போவார்கள்,

” மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா ! ”

இந்த மாதிரிப் பாரதியார்ப் பாப்பாப் பாட்டில் பாடியிருப்பது உங்களுக்கு நினைவு இருக்கலாம். பாரதியாருக்குப் பிச்சைப் போடுவதாக எண்ணிக்கொடு ஆடம்பரத்துடன் உதவி செய்பவர்களுக்கு, மேற்சொன்ன பாட்டில் உள்ள இரண்டு தண்டையும் நிச்சயமாகக் கிடைக்கும். அந்தச் சமயங்களில் பாரதியாரின் ரௌத்திரம் பொங்கி எழும். முகத்தைப் பார்க்கவே முடியாது. கண்கள் தீப்பொறிகளைக் கக்குவன போல இருக்கும். மீசை துடிதுடிக்கும். ” மடயன்! நான் ஏழையோ! அவன் சத்திரம் கட்டி வைத்திருக்கும் சீமானோ?” என்று ஆத்திரத்தோடு பேசுவார்.

பாரதியாருக்கு யாரும் பிச்சைப் போடமுடியாது. பயப்பக்தி விசுவாசத்துடன் கப்பம் வேண்டுமானால் கட்டலாம். அவர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா? அவர் குடைக் கீழ் வாழும் மாந்தர்களும் மனன்னர்களும் கிஸ்தி செலுத்தலாம் அல்லது கப்பங்கட்டலாம். காலணா கேட்கும் கடைத்தெருப் பிச்சைக்காரனா அவர்?

இந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது. இங்கிலீஷ் ஆசிரியர்களுக்குள், ஸாமுவேல் ஜான்ஸன் என்று ஒருவர் இருந்தார். அவர் மேன்மை வாய்ந்த குணசீலர்; மகத்தான தயை உள்ளவர்; மேதாவி. ஆனால் நித்திய தரித்திரர். அவருடைய தரித்திரத்தின் கொடுமையை ஓர் அன்பரால் தாங்க முடியவில்லை. ஜான்ஸனுடைய பாதரட்சைகள், அடி அட்டை தேய்ந்து நாலாப் பக்கங்களிலும் பிய்ந்து கிழிந்து போயிருந்தன.

அன்பருக்கு ஜான்ஸனிடம் நடுக்கம். ஜான்ஸனுக்குத் தெரியாமல், நடுராத்திரியில், ஜான்ஸன் குடியிருந்த அறையில், புதுப் பாதரட்சை ஜோடி ஒன்றை அன்பர் வைத்துவிட்டுப் போய்விட்டார். காலையில் புது ஜோடுகள் ’முகத்தில் விழித்தார்’ ஜான்ஸன். யாரடா அவன், என் ஏழ்மையைக் கண்டு ஏளனம் செய்யத் துணிந்தவன்?’ என்று அவர் எண்ணிக்கொண்டார்.

ஜோடுகளை அறைக்கு வெளியே கொண்டுபோய், கைக்கெட்டுகிற உயரத்தில் கட்டி, ”இந்த ஜோடுகளைத் திருட்டுத்தனமாக இங்கே கொண்டு வைத்தவனை, இவைகளாலேயே அடிப்பது உசிதம்” என்று காகிதத் துண்டில் எழுதி, அதை ஜோடுகளில் ஒட்டி வைத்து விட்டார். மறுநாள் இரவில், ஜோடுகள் இருந்தவிடம் தெரியாமல் போய்விட்டன.

இது நடந்த கதை. ஜான்ஸனுக்கு வந்தது விநோதமான, அசட்டக் கோபமல்லவா என்று நம்மில் பெரும்பான்மையோர் சாதாரணமாகவே எண்ணலாம். ”அதானாலேயே நாம் அசட்டு அடிமைகளாக இருக்கிறோம்” என்று வாய்த்துடுக்காகப் பதில் சொல்ல எனக்குத் தோன்றுகிறது. ஆனால், துடுக்கான பதில் சொல்வதால் லாபமென்ன?

பணம் சம்பந்தமாக, பாரதியாரிடம் இங்கிதத்துடன் பழகவேண்டும். அவருடன் பழகிய நண்பர்களுக்கெல்லாம் இது நன்றாகத் தெரியும். பாரதியார் யாரிடமும் நன்றாய்ப் பழகித் தெரிந்தாலொழிய – லேசில் பணம் கேட்டுவிடமாட்டார். கேட்டு வாயிழப்பதும் அவரால் தாங்க முடியாத காரியம்.

ஒரு சமயம், பணத்துக்கு ரொம்ப முடை. வீட்டில் உணவுச் சாமான்கள் இல்லை. ஐந்து ரூபாய் வேண்டுமென்று ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதி அனுப்பினார் பாரதியார். கடிதத்துக்குப் பதில் இல்லை. சாயங்காலம் அந்த நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. ”பாரதி! உங்களுக்கு நான் அனுப்பியிருப்பேன். இந்த ஒத்தாசை நான் செய்திருந்தால், உங்களுக்கு மனச்சமாதானம் ஏற்பட்டு, உங்களுடைய மேதையின் கூர்மை மழுங்கிப் போயிருக்கும். உங்கள் மேதையை அழித்துவிட எனக்குச் சம்மதமில்லை” என்று முந்திக்கொண்டு நண்பர் சொன்னார்.

பாரதியாருக்குத் தாங்க முடியாத ஆத்திரம். ”ஓய்! அளப்பை நிறுத்தும். மேதைக்கு தரித்திரம் மட்டும் போதாதா! அதோடு, நீர் ஏளனம் வேறு செய்ய வேண்டுமா! உம்முடைய மனப்பான்மையைச் சீர் திருத்தம் செய்ய முடியாது. அதை அடியோடு தலைகுப்புற அடிக்கும் புரட்சித் தத்துவம் இந்த நாட்டுக்குத் தேவை” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

புலவர் வறுமையை, கவிகளின் தரித்திரத்தை ஏளனம் செய்யத் துணிந்தவர்கள் மனிதப் பதர்கள். அவர்களுக்கு லட்சிய உயர்வும், உணர்ச்சிகளின் மேன்மையும் விளங்கவில்லை என்பது தெளிவு. ”காலம் போம்; வார்த்தை நிற்கும்” என்ற அபூர்வமான பழமொழியின் உண்மையைக் கனவிலும் கண்டறியாதவர்கள் அவர்கள். வறுமையில் சிறுமைத்தனம் கொண்ட காரியம் எதுவும் செய்யப்படாது. ஜான்ஸன், பாரதியார் செய்ததையும், நம்மில் பலர் ’வயிற்றுப் பிழைப்பு’ என்று சற்றும் கூச்சமில்லாமல் கூச்சல் போடுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் செய்கையிலுள்ள நயம் நன்றாய்த் தெரியும்.

மாலை வேளையில் நண்பர்கள் கூடிக்கொண்டால், அவர்களுக்கு ஏதேனும் சிற்றுண்டிகள் வழங்க வேண்டும் என்று பாரதியாருக்கு ஆசை உண்டாகும். அந்தச் சமயத்தில், அருமை கிருஷ்ணசாமி செட்டியார் அங்கே அடக்கமாய் இருப்பார். பாரதியாரிடம் ஏதாவது செல்லாப் பணமிருக்கும். அதை எடுத்து நண்பர்களிடம் காட்டி, ”இது செல்லுமா, பார்த்துச் சொல்லுங்கள்” என்பார். நண்பர்கள் செல்லாது என்றால், ”செல்லும் செல்லாததற்குச் செட்டியார் அதோ இருக்கிறார்” என்று பாரதியார், வாஞ்சையுடன் ’வெல்லச்சு’ நண்பரைச் சுட்டிக் காண்பிப்பார்.

மகா சூட்சும புத்தியுள்ளவரான கிருஷ்ணசாமி செட்டியாருக்கு இந்தக் குறிப்பு தெரியாதா? உடனே நோட்டோ பணமோ வெளியே வரும். பணமில்லாமல் பாரதியாரிடம் வரலாகாது என்பது செட்டியாரின் சங்கற்பமா? செட்டியார் மடியில் எப்பொழுதும் பணம் இருக்கும் என்பது பாதியாரின் நம்பிக்கையா? செட்டியாரைப்போல அபூர்வமான குணங்களைப் படைத்தவர்கள் நம் நாட்டில் சில பேர்களே.

இந்தச் செட்டியாருக்கு, முத்தியாலுப்பேட்டைக்கருகாமையில் ஒரு தோட்டமிருந்தது. இந்தத் தோட்டந்தான் பாரதியாரின் ”குயில் பாட்டுக்” குக் காட்சி ஸ்தலம். இந்தத் தோட்டத்தில் ஓர் அற்புதம் நடந்தது. அதைப் பற்றிப் பிறகு சொல்லுகிறேன்.

                 
12

Website Designed by Bharathi Sangam, Thanjavur