மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
14

புதுச்சேரியில் வசித்து வந்த பாரதியாரின் பேரிலும் அவருடைய சகாக்களின்பேரிலும் பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் ஏற்பட வேண்டும்? தென்னாப்பிரிக்கா போயர் யுத்த காலத்தில், கிம்பர்லி, லேடி ஸ்மித் கோட்டைகளை (இங்கிலீஷ் சேனைகளை உள்ளே வைத்து) போயர்கள் முற்றுகை போட்டது போலவே, பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் புதுச்சேரியை முற்றுகை போட்டார்கள்.

முற்றுகை என்ற பதத்தை நான் விளையாட்டுக்காக பிரயோகம் செய்ததாக எண்ண வேண்டா. ’புதுச்சேரிக்கு வெளியே, கடலிருந்த கிழக்குப் பாகத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும். போலீஸ் உடையோடும், போலீஸ் உடையில்லாமலும் போலீஸ்காரர்கள் பந்தோபஸ்த செய்து வந்தார்கள். இவர்களோடு மாமூல் எக்ஸைஸ் – அப்பகாரி இலாகாகாரர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

புதுச்சேரியிலிருந்து வந்த சந்தேகப்பட்ட பேர்வழிகளையெல்லாம் பிரெஞ்சு எல்லைப்புறத்தில் கடுமையாகச் சோதனை செய்தார்கள். மற்றும் பலரை நிரம்ப பயமுறுத்தினார்கள். இன்னும் சிலரைக் கைது செய்து, சிறையில் அடைத்து, சில நாள்கள் வைத்திருந்து, புதுச்சேரி தேசபக்தர்களுடன் சேரப்படாது என்று எச்சரிக்கை செய்து வெளியே விட்டார்கள். வியாரத்துக்காக வெளியூர்களுக்குச் செல்ல நேர்ந்த புதுச்சேரிவாசிகள் பலர் இந்த அவஸ்தைக்கு உள்ளானார்கள்.

பாரதியாருடன் இருந்தமுருகேசன் என்ற பையனைப் போலீசார் நிரம்பவும் வெருட்டிப் பயமுறுத்தினார்கள்; அவன் சென்னைக்கு வரும் சமயம் பார்த்து அவனைக் கைது செய்து, இரண்டொரு மாதம் காவலில் வைத்திருந்து, சோளக்கொல்லைப் பொம்மையாக ஆக்கி வெளியே விட்டார்கள்.

போலீசாரின் வெளி பந்தோபஸ்து அமல் இல்லாது நடந்து வந்தது. புதுச்சேரியில் அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள், தெரியுமா?

பிரிட்டிஷ் இந்தியப் போலீசார், தனியாக ஒரு பங்களாவையே வாடகைகக்குப் பிடித்துக்கொண்டார்கள். இவர்களுக்குத் தலைமையாக, ஒரு டெபுடி சூபிரண்டு. இந்தப் பதவியில் அப்துல் கரீம் என்பவர் இருந்தார். அவர் இப்பொழுது பென்ஷனும் கான்பகதூர் பட்டமும் பெற்று, சுகமாக இருக்கிறார். அவருக்குக் கீழே குருவப்ப நாயுடு, ரங்கசாமி அய்யங்கார் என்ற இரண்டு கெட்டிக்காரப் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள். புதுச்சேரி தேசபக்தர்களை வளைத்து நசுக்கிவிடுவதற்காக, கற்பனைக் கடங்காத அபார வலைகள் செய்தார்கள். இவர்களுக்குக் கீழே, சப் இன்ஸ்பெக்டர்கள், ’ஏட்டு அய்யாக்கள்’, காண்ஸ்டபிள்கள் மொத்தம் இருநூறு பேர்களுக்குக் குறையாமலிருந்தார்கள்.

கான்ஸ்டபிள்களுக்கும் ஏட்டுகளுக்கும் பங்களாவிலேயே சமையல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இத்தனை ஆர்ப்பாட்டங்களும் அரவிந்தர், பாரதியார், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பத்துத் தேசபக்தர்களுக்காக! புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் பட்டாளத்தின் செலவு என்ன என்று சென்னை அரசாங்கத்தார் சொல்லிவிட்டார்கள்.

இந்தப் போலீஸ் குழாம் புதுச்சேரியில் செய்த வேலை மெச்சத் தகுந்தது. தேச பக்தர்கள் வெளியே சென்றால் பின்தொடர்பவர்கள் போக, பாக்கியுள்ளவர்கள் பிரிந்து பிரிந்து புதுச்சேரி நகரத்தில் வேலை செய்து வந்தார்கள்; தங்கள் உத்தியோக மதிப்புக்குத் தக்கபடி அவர்கள் புதுச்சேரிவாசிகளைக் கண்டு பேசுவார்கள். சாதாரணப் போலீஸ் கான்ஸ்டபிள்கள், வெற்றிலை பாக்குக் கடைக்காரன், புஷ் வண்டிக்காரன் முதலியவர்களுடன் பழகி, தேச பக்தர்களிடம் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பிரசாரம் செய்வார்கள். பயமுறுத்தவும் செய்வார்கள். சப் இன்ஸ்பெக்டர்கள், பெரிய பெரிய கனவான்களைப் பேட்டி கண்டு, தேச பக்தர்கள் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாக வேலை செய்கிறார்கள் என்று சொல்லி, ’சுதேசிகளுக்கு’ அவர்கள் எந்த வகையிலும் ஒத்தாசை செய்யலாகாது என்று எச்சரிக்கை கலந்த புத்திமதி கூறுவார்கள்.

புதுச்சேரியில் வாழ்ந்து வந்த தேச பக்தர்களை புதுச்சேரிவாசிகள் ’சுதேசிகள்’ என்று அழைத்து வந்தார்கள்.

புதுச்சேரி பிரெஞ்சுப் போலீசும், பிரிட்டிஸ் இந்தியப் போலீசும், ரஸ்தாக்களிலும், கடைத்தெருக்களிலும், மார்க்கெட்டிலும், கடற்கரையிலும், ரயில்வே ஸ்டேஷனிலும் கூடிக் கலந்து, ’குசு குசு’ வென்று இரகசியம் பேசிக்கொண்டு சல்லாபம் செய்யும் காட்சியை வர்ணிக்கவே முடியாது.

குருவப்ப நாயுடுகாரு, ரங்கசாமி அய்யங்கார் இவர்களிருவரும் பாரதியாரைக் கண்டு பேசுவார்கள். இவர்களிரண்டு பேர்களிலும் ரங்கசாமி அய்யங்கார்தான் அடிக்கடி பாரதியாரின் விட்டுக்கு வந்துவிடுவார். பாரதியாரை ஏய்த்து உளவு சம்பாதித்துவிடலாம் என்ற நோக்கமோ அல்லது பாரதியாரின் கவிதைத் திறமையிலே, பேச்சுத் திறமையிலே அவருக்குப் பிரேமையோ அது இன்னதென்று தெரியவில்லை.

உளவு என்று சொன்னேனே, அது எதைப்பற்றி? ஆஷ் கொலைக்கும் புதுச்சேரி ’சுதேசி’களுக்கும் சம்பந்த இழை இருப்பதாகப் பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருக்குச் சந்தேகம். தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை என்பவர், திருநெல்வேலிச் சதி வழக்கில் அப்ரூவராக மாறி, சில அபாண்டாமான பழிகளைப் புதுச்சேரி ’சுதேசி’களின் பேரில் சொல்ல நேர்ந்தது.

இந்தச் சதி வழக்கில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட ஒட்டப்பிடாரம் மாடசாமிப் பிள்ளையவர்கள் போலீசாரின் கையில் அகப்படாமல் எங்கேயோ தப்பி ஓடிப் போய்விட்டார். (ஒட்டப்பிடாரம் என்பது தூத்துக்குடிக்குச் சமீபத்தில் இருக்கிறது.) இன்று வரையில் மேற்சொன்ன மாடசாமிப் பிள்ளை எங்கு இருக்கிறார் என்ற செய்தி யாருக்குமே தெரியாது. அவர் உயிருடனிருக்கிறாரா அல்லது இறந்து போய்விட்டாரா என்ற தகவலும் கிடையாது. இது நடந்து முப்பத்து மூன்று வருஷங்காகின்றன.

மாடசாமிப் பிள்ளை புதுச்சேரிக்குப் போய், அங்கே ’சுதேசி’ களால் போஷிக்கப்பட்டு, ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று அந்தக் காலத்தில் போலீசார் ரொம்பும் சந்தேகப்பட்டார்கள், இந்த இரகசியத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் பகீரதப் பிரயத்தனம் செய்தார்கள். மேலும், புதுச்சேரி ’சுதேசிகள்’, துப்பாக்கி முதலிய ஆயுதங்களைப் பிரான்சு முதலிய அந்நிய நாடுகளிலிருந்து தருவித்து, எங்கேயோ மறைவிடத்தில் ஒளித்து வைத்துச் சேகரித்து வருகிறார்கள் என்ற அபத்த வதந்தியும் போலிசாரின் சுறுசுறுப்புக்குக் காரணம்.

இது காரணம் பற்றியே ரத்தின வியாபாரியாயும், வக்கீலாயும், தேசபக்தராயும், சன்னியாசியாயும், காவிய ரசகராயும் வேஷம் போட்டுக்கொண்டு, பாரதியரையும் மற்றுமுள்ள ’சுதேசி’களையும் போலீசார் பேட்டி கண்டார்கள். அரவிந்தர் யாரையுமே பார்ப்பதில்லை. அவர் வெளியே புறப்படுவதுமில்லை. பங்களாவுக்குள்ளாகவே அவருக்கு வாசம். பாரதியார் முதலியவர்கள் அந்த நியதி வைத்துக்கொள்ளவில்லை. மேலும், பாரதியார் ஒரு வகையில் ரொம் ஸரஸி. அந்நியர்களிடமும் முகத்தைக் ”கடு கடு” என்று வைத்துக்கொண்டு பேசவே அவருக்குத் தெரியது. தேசத்துரோகியாயிருந்தாலும், திக்கற்ற மனித ஜீவன் என்ற முறையில், அவனிடமும் பாரதியாருக்கு அளவுக்கு மிஞ்சிய காருண்யமுண்டு.

அந்தக்காலத்தில் புதுச்சேரியில் சகஜமாய்க் கிளம்பிய புரளிகளைக் கேட்டால், உங்களுக்குச் சிரிப்பு வரும். ’சுதேசி’களை அப்படியே மோட்டார்களில் வைத்து, பிரிட்டிஷ் இந்தியவுக்குத் தூக்கிக்கொண்டு போகும்படியாகப் போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்து விட்டார்கள் என்று ஒருவன் வியர்க்க வியர்க்க வந்து சேதி சொல்லுவான். பாரதியார் குலுங்கக் குலுங்க நகைப்பார்.

’சுதேசிகள் புதுச்சேரியிலிருந்து இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் வெளியே போய்விடவேண்டுமென்று பிரெஞ்சுக் கவர்னர் உத்தரவு போட்டுவிட்டார். அந்த உத்தரவைச் சாதரா செய்யப் பிரெஞ்சுப் போலீஸ்காரர்கள் இதோ வந்துகொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை வருகிற வழியில் பார்த்தேன்” என்று ஒருவன் ’கேட்டை குந்தாணிப் புளுகு’ ளேடபபபடன, ”கூண்டோடு கைலாசம்; எல்லாஹிந்துக்களும் ஆசைப் படுகிற சங்கதி” என்று பாரதியார், அந்தப் புளுகைக் கேட்டு ஆனந்தமாய் அனுபவிப்பார்.

நந்தகோபாலு செட்டியார் என்பவர் புதுச்சேரி அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தைலைவர். அவர் செம்படவச் செட்டியர். கப்பல் ’கடநடிலபடமமு’, கடலைக் கொட்டை வியாபாரம் அவரது தொழில்கள். நத்நகோபாலுவின் பெயரைச் சொன்னால் புதுச்சேரி நடுங்கும். அவருக்கு ’அடியாள்’ ஜமாநிரம்ப ஜாஸ்தி என்று பிரஸ்தாபம். ஒரு வேடிக்கைப் பல்லவிகூட அவரைப்பற்றி உண்டு. ”நந்தகோபாலு பாந்து (கூட்டம்) வருது; சாக்கோ, சாக்கோ (ஜாக்கிரதை, ஜாக்கிரதை)” என்று புதுச்சேரியார் சொல்லிக்கொண்டு அச்சப்படுவதுண்டு. நந்தகோபாலு இப்பொழுது இறந்துபோய் விட்டார்.

‘சுதேசி‘களைப் பலவந்தமாய்ப் படித்துக் கொடுப்பதாக நந்தபோபாலு பிரிட்டிஷ் இந்தியப் போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அந்தக் காரியம் இரண்டு மூன்று நாள்களுக்குள் கட்டாயம் நடந்துவிடுமென்று ஒருவன், கிலிபிடித்த கண்களோடு, வாய் குளறித் தடுமாறும்படி வந்து சொல்லுவான்.

ஆச்சரியம் என்னவெனில், சற்று முன்னர்தான், பாரதியாரையும் சீனிவாசாச்சாரியையுடம் பார்த்துப் பேசி சல்லாபம் செய்துவிட்டு நந்தகோபாலு பேயிருப்பார். நந்த கோபாலின் சல்லாபப் பேட்டிக்கு விபரீத அர்த்தம் கொடுத்துப் புரளியைக் கட்டிவிடுவார்கள் போலீசார். நந்தகோபாலு தமது உண்மையான கருத்தை மறைத்து நயவஞ்சகத்துடன் ‘சுதேசி‘களோடு சல்லாபம் செய்து விட்டுப் போனார் என்று மேற்கொண்டும் சூட்சும அர்த்தம் கற்பிப்பார்கள்.

தெய்வக் காதலிலே, கவிதை உணர்ச்சி கொண்டு ஆழ்ந்து கிடக்கும் பாரதியாரை, விலைமாதரைக் கொண்டு ஏய்த்துவிடப் போகிறார்கள் என்று ஒரு புரளி. இந்தப் புரளிக்கெல்லாம் அஸ்திவாரம் ஒரே இடந்தான். அந்த இடம் எது என்று நான் தெளிவாகச் சொல்லவும் வேண்டுமா?

கடைசிப் புரளியைக் கேட்டு, பாரதியார் துடிதுடிட்ததுப் போவார். “மனிதப் பதர்கள்! பாரதியை அவர்கள் யாரென்று எண்ணிக்கொண்டார்கள்? அதமர்கள்! நாட்டின் மனோபாவம் இவ்வளவு கீழ் நிலைமையிலிருக்கிறதே! இந்தக் கீழ்த்தரமான மனோ நிலையிலிருந்த அவர்களை மேல்படிக்கு எப்படி கொண்டு வருகிறது?” என்று முகவாட்டத்துடன் வருந்துவார்.

புதுச்சேரியில், போலீசார் முற்றுகை போட்ட காலத்தில், ‘சுதேசி‘கள் எவ்வளவு கஷ்டத்துக்கு, எத்தகைய இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று சொல்ல முடியாது. பணக்கஷ்டத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தபால் சரியாகக் கிடைக்காது. மணியார்டர் வந்து சேராது. பயந்துபோன புதுச்சேரிவாசிகளின் மூலமாய்ப் பல தொல்லைகள் ஏற்பட்டன. அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து சில்லறையாகக் சாமான்கள் கடன் வாங்கிக் கொடுப்பதுகூட அருமையாகப் போய்விட்டது.

தேச விடுதலை, புதிய உலக நிர்மாணம், நூதன உண்மைகளை நிலைக்கச் செய்தல் இவை சிரிய சங்கதிகள் அல்ல. எவ்வளவு தியாகம் செய்தாலும் போதாதே என்று எண்ண வேண்டிய காரியங்கள் இவை. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்பார்கள். சிரேஷ்டர்கள் மனம் புழுங்கிப் புழுங்கி இறந்தாலொழிய, ஏழைகள் கண்ணீர் சொரிவதில்லை. பாரதியார், அரவிந்தர், காந்தி முதலிய சிரேஷ்டர்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளானால்தான், தேசத்தாரின் மனச்சாட்சி கூராகும்.

போலீஸ் நெருக்கடியான காலத்தில் பாரதியாருக்கு உற்ற துணைவர்களாயிருந்தவர்களில் முக்கியஸ்தர்களாக மூன்று பேர்களைச் சொல்ல வேண்டும். ஒருவர் சுந்தரரேச அய்யர் என்பவர். இவர் தெலுங்கர்; மணிலாக்கொட்டை வியாபார ஸ்தலமொன்றில் குறைந்த சம்பளம் வாங்கி வந்த குமாஸ்தா. இவர் தமது மனைவியின் நகைகளை அடகு வைத்தும் விற்றும் எவ்வளவு பணம் பாரதியாரக்குக் கொடுத்திருப்பார் என்று சொல்ல முடியாது. பாரதியாரின் கவிதையிலே இவருக்கு அளவு கடந்த மோகம்.

இன்னொருவர் பொன்னு முரகேசன் பிள்யைவர்கள். இவர் பாரதியார் குடியிருந்த வீட்டுக்கு இரண்டு வீடுகளுக்கு அப்பால் ஈசுவரன் தர்மராஜா வீதியில் இருந்து வந்தார்; சொத்துடையவர்; தெய்வமே கிடையாது என்று சங்கள்பங்கொண்டவர்; பிரெஞ்சு பாஷையில் அபூர்வமான பயிற்சி பெற்றவர்; நல்ல உடல்கட்டு வாய்ந்தவர். இவர் விட்டிலேதான் பாரதியார் குடியாகக் கிடப்பர். பாரதியாரோடு கட்சிவாதம் செய்வதில் பிள்ளையவர்களுக்கு அடங்காத ஆர்வம். பாரதியாரின் ஈசுவர பக்தியை இகழ்ந்து பேசுவதில் பிள்ளையவர்களுக்குப் பேரானந்தம். பிள்ளையவர்கள் பாரதியாருக்குப் பண உதவி செய்ததில்லை. பிள்ளையவர்களின் மூத்த குமாரன் ராஜா பகதூர் பாரதியாரின் பக்தன்.

முருகேசம் பிள்ளையின் மனைவியார் பாரதியாருக்குச் செய்த சேவையை எப்படிப் புகழ்வது என்று எனக்கே தெரியவில்லை. உத்தம கணங்கள் பொருந்திய இந்த லட்சுமியைப் பற்றி, அத்தியாயக் கணக்கில் எழுதினாலும் என் ஆசை தீராது. பாரதியாரின் பட்டினி சமயம் பார்த்து, வற்புறுத்தி அன்னமளித்து உபசாரம் செய்வதில், இந்த அம்மாள் இணையற்றவர். பின்னர் அந்த அம்மாளைப்பற்றி விவரமாகச் சொல்லுகிறேன்.

பாரதியார் அநேகமாய் எப்பொழுதும் பொன்னு முருகேசன் பிள்ளையவர்கள் வீட்டிலேதான் தங்கியிருப்பார். முருகேசன் பிள்ளைவர்களின் வீடு விஸ்தாரமான வீடு. மெத்தை உண்டு. மெத்தையிலே ஓர் அறையிலே, பாரதியார் இருப்பார். இரவுப் பொழுதையும் சில சமயங்களில் அங்கேயே போக்கிவிடுவார்.

இந்த வீட்டிலே கோவிந்தன் என்று ஓர் அருமையான பையன் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். கோவிந்தனும் அவனது சகோதரர்களும் சேர்ந்து மூன்று பேர்கள். இவர்களுடைய தாயார் நிரம்பத் தைரியசாலி. இந்த அம்மாள் பாரதியாரின் வீட்டிலே சுற்றுக்காரியங்கள் செய்து வந்தாள். உடம்பு குச்சி போல இருக்கும். பற்கள் வெளியே நீண்டிருக்கும். காது கேட்காது. ஜாடையிலே பேசினால், அதை வெகு நுட்பமாகக் கண்டுகொள்ளுவாள்.

பாரதியார் சம்பளம் கொடுப்பாரோ கொடுக்கமாட்டாரோ, இந்த அம்மாள் யாதொரு முணுமுணுப்புமின்றி வேலை பார்த்து வந்தாள். வேலையிலே நிரம்பச் சுறு சுறுப்பு. சோம்பல் என்பதே அந்த உடம்பில் கிடையாது. கூலி வேலை செய்தாலும், கௌரவம் என்ற வஸ்துவை வெகு ஜாக்கிரதையாகப் பந்தோபஸ்து செய்து வைத்திருந்தவள்.

அவளிடம் சச்சரவு செய்து யாரும் மீளவே முடியாது. ஏன்? அவள் அசத்தியமாகப் பேசினதே இல்லை எனலாம். அகௌரவமான காரியமும் செய்ததில்லை; யாருக்கும் உபகாரம் செய்வாள். அவளுடைய பெயர் அம்மாக்கண்ணு.

அவள் சம்மந்தமாக பாரதிதாஸன் ஓர் அருமையான கதை சொன்னார். இந்தக் கதை நிரம்பப் பின்னால் நடந்திருக்கலாம். அம்மாக்கண்ணு பெயர் வருகிற இந்த இடத்தில் சொல்லிவிடுவது சற்றுப் பொருத்தமாயிருக்கும்.

பாரதியார் ஒரு சமயம், அதிகமான வருத்தத்தினால் புதுச்சேரியை விட்டுவிட்டு, பிரிட்டிஷ் இந்தியாவுக்குப் போய்விடுவது என்று தீர்மனங்கொண்டாராம். இது 1917 ஆம் வருஷம் நடந்திருக்க வேண்டும். ஆத்திரப்பட்டுக்கொண்டு, ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் விட்டார். அவரைத் தடுக்க யாரால் முடியும்.

இளமைப் பருவத்தில் பாரதியாருடன் அவருடைய மனைவி ஸ்ரீமதி செல்லம்மாள் எதிர்த்துப் பேச முடியாது. நண்பர்களும் அப்படியே. பாரதியார் கோபங்கொண்டு எங்கேயோ வெளியே போய்விட்டார் என்ற சேதி நண்பர்களுக்குத் தெரிந்தது. அம்மாக்கண்ணு வீட்டிலில்லை. அம்மாக்கண்ணு வீட்டிலிருந்திருந்தால் பாரதியாரை வெளியே கோபித்துக்கொண்டு போக விட்டிருக்கவே மாட்டாள். பாரதியாருக்கு யோசனை சொல்லியோ, அவரோடு கண்டை போட்டோ அல்லது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோ காரியத்தில் வென்றிருப்பாள். பாரதியார் கோபமாய்ப் போனதைக் கேட்டு, அம்மாக்கண்ணு புதுச்சேரியில் எங்கேயெல்லாமோ தேடி அலைந்து பார்த்தாள். பாரதியார் அகப்படவில்லை.

சுப்புரத்தினம் (பாரதிதாசன்) நேரே புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய், அங்குப் பாரதியார் இருப்பதைக் கண்டார். பாரதியார், கண்களில் தீப்பொறி பறக்க, ஸ்டேஷனில் யாருடனும் பேசாமல் உலாத்திக் கொண்டிருந்தார்.

சுப்புரத்தினத்தைப் பார்த்ததும் பாரதியாரின் முகம் ஒருவாறு மலர்ச்சி அடைந்தது. பிறரிடத்தில் – சம்பந்தமில்லா மூன்றாம் மனிதனிடத்தில் கோக முகத்தை அல்லது வருத்த முகத்தைக் காண்பிப்பது நல்ல பழக்கமில்லையல்லவா?

பாரதியாரைச் சமாதானம் செய்த எப்படியோ சுப்புரத்தினம் திருப்பி அழைத்துக்கொண்டு வந்தார். இருவருக்கும் புஷ் வண்டி சவாரி. தர்மராஜா கோயில் வீதியிருந்த தமது வீட்டுக்கு வர முடியாது என்று பாரதியார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

வேறு வீதி வழியாக, சுப்புரத்தினம் வீட்டுக்குப் போவதாகத் தீர்மானித்து, புஷ் வண்டியை அந்த வழியே செலுத்தினார்கள். வழியிலே அம்மாக்கண்ணு நின்று கொண்டிருந்தாள், சுண்டல் முதலிய தின்பண்டங்களுடன்.

பாரதியார் திரம்பி வருகிற செய்தியைப் பையன்கள் அவளிடம் சொல்லியிருக்க வேண்டும். பாரதியார் அன்றைக்குப் பட்டினி. அது அம்மாக்கண்ணுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அம்மாக்கண்ணு வழி மறித்து இந்த உபசாரங்கள் செய்ததும் பாரதியாருக்கு அளவிலா மகிழ்ச்சி. ” தேவாமிருதம்” என்றார் பாரதிதாஸன். உடனே தேவலேக நினைப்பு பாரதியாருக்கு வந்திருக்க வேண்டும். புஷ் வண்டிக்காரனைப் பார்த்து, ” ஓட்டடா ரதத்தை” என்றாரம் அவர்.

ஒரு சொல்லின் மூலமாய் மனிதனுக்கு எத்தகைய அபூர்வமான கற்பனை தோன்றுகிறது என்பதற்கு, இந்தச் சம்பவம் இணையற்ற அத்தாட்சி. தேவாமிருதம், தேவலோகம், ரதம் இவை படிப்படியாக வந்த கற்பனைக் காட்சிகள். கற்பனையில்லாத மனிதன் கால் மனிதன்கூட அல்ல.

அம்மாக்கண்ணு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழைக் குடித்தனக்காரி; மகா குரூபி; கிழப்பருவம் எய்தியவள்; குணவிசேஷங்களைத் தவிர, பழக்கத்தால் ஏற்படும் கல்வி முதலிய சக்திகள் ஒன்றுமில்லாதவள். இப்பேர்பட்ட அம்மாக்கண்ணுக்குப் பாரதியாரிடம் பக்தி ஏற்பட்டது ஆச்சரியம் என்பீர்கள் எனக்கு ஆச்சரியமாகத் தோன்றவில்லை.

அம்மாக்கண்ணு லேசான பேர்வழி அல்லள். அவள் ”வீரை, சக்தி சொரூபம்.” அவளுக்குக் கல்வியில்லாமலிருக்கலாம். இயற்கை அறிவுகூட இல்லாமல் போய் விட்டதா? இயற்கை அறிவு , இயற்கை உணர்ச்சி – இவைகளைக்கொண்டு பாரதியாரை அவள் எடை போட்டுப் பாத்திருக்க வேண்டும். பாரதியாரின் இயற்கையான மேன்மைக் குணங்களைக் கண்டு, அவள் பரவசமாகியிருக்க வேண்டும்.
பாரதியாரின் வீட்டிலே சலிக்காமல் தொண்டு செய்தவள் அம்மாக்கண்ணு. அவளுடைய பக்தி தேவதாவிசுவாசம் போன்றது.

பொன்னு முருகேசம் பிள்ளைக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்கு ஒரு பெண் குழந்தை அவளுக்கு வயது பத்து அல்லது பதினொன்று இருக்கலாம்.

இனிமையான தொண்டை வாய்ந்தவள். அந்தப் பெண் தினசரி வீட்டு வேலைக்கான நேரம் போக, தன் மாமன் முருகேசம் பிள்ளையவர்களின் வீட்டிலேயே இருப்பாள். அவளுக்குப் பாரதியாரிடம் இருந்த பிரேமையை அளவிட்டுச் சொல்ல முடியாது.

அந்தக் குழந்தை அதிகமாக வாய்விட்டுப் பேசினதேயில்லை. உத்தமப் பெண்ணுக்குரிய லட்சணங்களை அவள் முகத்திலே காணலாம். நல்ல பொறுமைசாலி. முகம் சாந்த சொரூபம். அதோடுகூட, மறையாத, அழியாத புன்னகை. பாரதியாருக்குச் சில்ல்றைத் தொண்டுகள் செய்வதில் அவளுக்கு அளவு கடந்த ஆவல்.

இந்தக் குழந்தைப் பெண் பாரதியாரின் குழந்தை மனப்பான்மையில் ஈடுபட்டுப் போயிருக்க வேண்டும். பாரதியார் குழந்தைகளுக்கு நல்ல விளையாட்டுத் தோழர். மனிதர்களின் எந்த மனோ நிலைமையை அவரால் கற்பனை செய்துகொள்ள முடியாது.

பொன்னு முருகேசம் பிள்ளையவர்களின் மனைவியார் பெண்மையின் வேறொரு ’ஸாம்பிள்’. அந்த அம்மாளின் பெயர் எனக்கு ஞாபகமில்லை. அவர் இறந்து போய்விட்டார். மேற்சொன்ன மற்ற இருவரும் இப்பொழுது உயிரோடிருக்கிறார்கள்.

பிள்ளையின் மனைவியாருக்கு இரட்டை நாடி உடம்பு. குங்குமப் பொட்டு அவருடைய முகத்தில் எப்பொழுதும் அழகு செய்துகொண்டிருக்கும். தூக்கத்தில்கூட அந்தப் பொட்டு கலைவதில்லை. ஏனெனில், விடியற்காலத்தில் அந்த அம்மாள் எழுந்திருந்தவுடன், நான் பார்த்திருக்கிறேன். சிறிய பூரண சந்திரணைப்போலிருக்கும் அவருடைய குங்குமப் பொட்டு, எந்த ஓரத்திலும் கலைந்திருந்தது கிடையாது. அசுரத் தூக்கமில்லாத தேவகணத்தைச் சேர்ந்தவர் அவர்.
அவருக்கு இரட்டைநாடி உடம்பாயினும் சோம்ட்ல துளிக்கூடக் கிடையாது. பிரஸ்தாபக் காலத்தில் அவருக்கு நாற்பது வயதுக்கு மேலிருக்கலாம். ராஜாபகதூர், கனகராஜா என்று இரண்டு பயன்கள் அவருக்கு. ராஜாபகதூர் பாரதியாரின் பக்தன். ராஜாபகதூரைப்பற்றிப் பாரதியார் நிரம்பவும் கொண்டாடிப் பேசுவார். நான் புதுச்சேரியில் இருந்த காலத்தில், ராஜாபகதூர் மேல் படிப்புக்காகப் பிரான்ஸ் தேசத்துக்குப் போயிருந்தார்.

ராஜாபகதூரின் தாயார் பூமி அதிர நடந்து நான் பார்த்ததில்லை. குரலைத் தூக்கிப் பேசினதைக் கேட்டதில்லை. முகத்தைச் சுளித்துக்கொண்டதைப் பார்த்ததேயில்லை. யாரிடமாவது ‘வெட்டி வம்பு’ பேசினதை ஒருபொழுதும் கண்டதில்லை. மௌனமாய், இங்கிதமறிந்து, காரியம் செய்வார். அந்த அம்மாள் பாரதியாரோடு அதிகமாகப் பேசினதையும் நான் கண்டதில்லை. பாரதியாரை ராஜா பகதூரின் அண்ணனாகப் பாவித்து வந்திருக்க வேண்டும் அந்த அம்மாள்.

காலையில் பாரதியார் எழுந்திருந்தால், பல் விளக்குவதற்குப் பல்பொடியும் தண்ணீரும் தயாராக மெத்தையில் காத்துக்கொண்ருக்கும். பாரதியார் பல் தேய்த்து முகம் கழுவியது, வீட்டின் அடுப்பங்கரையிலிருக்கும் அந்த அம்மாளுக்கு எப்படித் தெரியுமோ, உடனே காபி, இட்டிலி அல்லது ஏதாவது தின்பண்டம் வந்துவிடும். குழந்தையின் முகம் பார்த்து உணவு ஊட்டும் தாயைப் போல நடந்துகொண்டு வந்தாள் அந்த அம்மாள்.

பெரிய மனிதர்கக்கு, துன்பமயமான அவர்களுடைய பாலைவன வழ்க்கையில் மேற்சொன்னது போல் சில இன்பமான சில்லறைச் சம்பவங்கள் நீர்ச்சுனைகளைப் போல நேர்ந்தாலொழிய அவர்களுடைய கழுத்திலே சுருக்குக் கயிறு ஏறிவிடும் என்பதை நிச்சயமாகச் சொல்லலாம்.

ராஜாபகதூரின் தயாருக்குச் தேச விடுலையில் கவலையா? இல்லை. பாரதியர் அவருக்கு உறவா? இல்லை. பாரதியார் கவிதை மேதையை அவர் கண்டறிந்தவரா? அதுவுமில்லை. பாரதியார் பிறருக்குச் சில்லறைத் தொல்லைகள் கொடுக்காதவரா? இல்லை. பாரதியார் தமக்குத் தாமே ஒன்றும் செய்துகொள்ளத் தெரியாதவர்; பழக்கமில்லாதவர். அவர் உடைகளைப் பிறர் வெளுத்துச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சமயம் பார்த்துச் சாப்பாட்டுக்குக் கூப்பிட வேண்டும். வேலையிலிருக்கையில் அவரை யாரும் கிட்டே நெருங்கமுடியாது.

நடத்தைக் கிராமத்தில் மரியாதை விஷயத்தில் பிறர் துளி தவறி நடந்தாலும், பாரதியாருக்கு ரோஷமும், ஆத்திரமும் வந்துவிடும். இரவிலோ, விடியற்காலையிலோ, எப்பொழுதேனும் வெறி பிடித்தாற்போல் பாரதியார் பாட ஆரம்பித்துவிட்டால், பாட்டு நிற்பதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் பிடிக்கும். தெருவாருக்கும் தூக்கம் கெடலாம். வீட்டிலுள்ளவர்களுக்கும் தூக்கம் போய்விடலாம். ஆனால், யாரும் இதைப்பற்றிப் பாரதியாரிடம் குறை கூறிக்கொண்டதே கிடையாது.

பாரதியாரிடம் ஒரு கெட்டபழக்கம் உண்டு. எச்சிலை எட்டப் போய்த் துப்ப மாட்டார். இருந்த இடத்திலிருந்து துப்புவார்; அது எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கு அதுதான் பிராப்தி. பிள்ளையவர்களின் வீட்டிலும் இந்த அட்டஹாசம் நடைபெறும். இதைப்பற்றி ராஜா பகதூரின் தாயார் அருவருப்புக் கொண்டதே இல்லை. எங்களுக்குப் பாரதியாரின் இந்தப் பழக்கம் பிடிக்கவில்லையாயினும், அவரிடம் நேரே சொல்ல எங்களுக்கு அச்சமும் கூச்சமும் ஏற்படும்.

பாரதியார் வெளியே போகும் காலம் பார்த்து, அவர் இருந்த அறையைச் சுத்தம் செய்வார், அந்த அம்மாள். இதைப்பற்றி வீட்டிலே யாரும் மூச்சு விடக் கூடாது. முருகேசம் பிள்ளையவர்களும் பக்தி நிறைந்த கனவான். அவரும் பாரதியாரின் இந்தப் பழக்கத்தைக் கவனிப்பதே இல்லை.

ராஜா பகதூரின் தாயார், ஹிந்துக் குடும்பத்தில் உத்தம நெறி பற்றி, இல்லறம் நடத்தியவர். பாரதியாருக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது, ஹிந்துக் குடும்ப வாழ்க்கைப் பழக்கத்தினால் என்பது எனது துணிவு. தாய் மனப்பான்மை கொண்டவர் அவர். இப்பேர்ப்பட்ட புண்ணியவதிகளான பெண்மணிகள் நமது நாட்டில் லட்சக்கணக்கில் தோன்றினால், நமது நாடு எந்த நாட்டுக்கும் கீழான நிலையில் இருக்காது என்பது உறுதி.

                 
14

Website Designed by Bharathi Sangam, Thanjavur