மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
16

உபகாரி சங்கர செட்டியாரின் தீவிர முயற்சியால் ஐந்து கௌரவ மாஜிஸ்ட்ரேட்டுகளின் கை எழுத்துகள் கிடைத்துவிடவே, அப்பொழுது புதுச்சேரியிலிருந்த ‘சுதேசி’கள் அத்தனைபேரும் ‘எத்ராங்ஷேர்’ (அந்நியர்) சட்டத்துக்கு இரையாகாமல் தப்பித்துக் கொண்டார்கள். முற்றுகை போட்டு வந்த போலீசாரின் முகங்களைப் பார்க்க வேண்டுமே! ஈ ஆடவில்லை.

புதுச்சேரிச் சட்டசபையில் இந்தச் சட்டம் விவாதத்துக்கு வரும் என்று கேள்விப்பட்ட நாள் முதல், சட்டம் பூர்த்தியான தேதி வரையில் ‘சுதேசி’களளக்குக் கவலைதான். ஸ்ரீஅரவிந்தர்கூட இந்தக் கவலையை அடிக்கடி முகத்தில் காண்பித்துக்கொண்டார் என்றால், வேறு என்ன சொல்ல வேண்டும்? ‘சுதேசி’களுள் நிரம்பவும் கவலைப்பட்டவர் வ.வே.சு.அய்யர்தான். ஏன் அவர் மட்டும் அவ்வளவு கவலைப்பட்டார் என்று தெரியவில்லை.

ஆனால் பாரதியாரோ, வசந்தகாலக் கயிலைப் போலப் பாடிக்கொண்டுதான் இருந்தார். சிரிப்புக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தக் ‘கண்டம்’ சுதேசிகளை ஒன்றும் செய்யாது என்று அவருக்கு மட்டும் மனேதிடமும் நம்பிக்கையும் ஏற்பட்டதற்குக் காரணம் தெரியவில்லை. கேட்டால், பராசக்தி இருக்கிறாள் என்று பாரதியார் ஒருகால் சொல்லியிருக்கக்கூடும்.

அது என்னவே, மனம் கலங்காதவர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தவர்கள் எல்லாரும் அந்தச் சந்தப்பத்தில் இலேசாகச் ‘சப்பையாய்’ப் போய்விட்டார்கள். காரியம் செய்யத் தெரியாதவர் என்று பெயர் வாங்கி வந்த பாரதியார்தான் இந்த நெருக்கடியில், முதல் பரிசு பெறக்கூடிய மனோதிடத்தைக் காண்பித்தார்.


‘சுதேசி’கள், வலையில் அகப்படாமல் தப்பிப்போனது முற்றுகைக் போலீசாருக்குப் பிடிக்கவில்லை. ஓர் உபாயம் தோற்றால் என்ன? இன்னோர் உபாயம். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது மட்டும் ‘சுதேசி’களுக்குத் தெரியவில்லை. பாரதியார் சொல்லுவதைப் போலச் ‘சுதேசி’கள் ‘கியால்’ பாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், ‘சுதேசி’களின் பாடு வேறுவகையில் திண்ணடாட்டமாகப் போய்விட்டது. அவர்களுக்கு வரக்கூடிய ‘மணியர்டர்கள்’ எல்லாம் தபாலாபீஸிலேயே தடுக்கப்பட்டுவிட்டன. அவசரத்துக்குக் கையில் கொஞ்சம் பணம் இருந்தால் நல்லது என்று யோசனையே இல்லாத பாரதியாரின் நிலையும் நிரம்பவும் சங்கடமாகப் போய்விட்டது.

இந்த விஷயத்தில் வ.வே.சு.அய்யர் நிரம்பவும் சமர்த்தர்; கையிலே போதுமான பணம் வைத்துக்கொண்டிருந்தார். சீனிவாஸாச்சாரியாருக்கும் பாதகமில்லை. அப்பொழுது அரவிந்தரின் நிலைமையும் பாதகமில்லை. இத்தகைய சமயத்தில், இருக்கிறவர்கள் இல்லாதவ்ர்களுக்கு உதவி செய்வதுதான் தேசப்பிரஷ்டமான தேசபக்தர்கள் எந்த நாட்டிலும் கைக்கொள்ளும் முறையாகும். அத்தகைய உதவி ஒன்றும் பாரதியாருக்குக் கிடைக்கவில்லை.

காலம் போவது கஷ்டமாய்ததான் இருந்தது. இப்படி இருக்கையில், அய்யர் வீட்டில் ஒரு நாள் காலையில் அற்புதம் ஒன்று நிகழ்ந்தது. வேலைக்காரி கிணற்றிலிருந்து தண்ணீர் இழுக்கையில், வாளியில் ஏதோ தடுக்கப்பட்டது போலத் தோன்றிற்று. அவள் அதை அய்யரிடம் சொன்னாள். அய்யர் கிணற்றைத் துழாவித்துழாவிப் பார்த்தார். நன்றாக ‘சீல்’ வைத்திருந்த மை ஜாடி ஒன்று அகப்பட்டது.

ஜாடி கொஞ்சம் பெரிய ஜாடிதான். அதை அய்யர் வெறியே எடுத்தார். அய்யருக்கு உடனே சந்தேகம் உண்டாகிவிட்டது. எதிரிகளின் சூழ்ச்சி என்று மனத்தில் முடிவு கட்டிக்கொண்டார். ஜாடியின் சீலைப் பெயர்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அவருக்கு ஆசை, இருந்தாலும், சீலை உடைக்காமலே அதைப் பிரெஞ்சுப் போலீசாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று அவருக்குத் தோன்றிற்று.

இந்த மாதிரி ஜாடி அகப்பட்டதை உடனே அரவிந்தர், பாரதியார் முதவியவர்களுக்கு அய்யர் தெரியப்படுத்தினார்; ஜாடியைப் பிரெஞ்சுப் போலீசாரிடம் ஒப்படைத்து, அது கிடைத்த வகையைப்பற்றி வாக்குமூலம் கொடுத்தார்.

பிரெஞ்சுப் போலீசார் சீலைத் திறந்து பார்த்தார்கள். தமிழ்நாடு முழுவதும் சதிக் கூட்டங்கள் இருப்பதாகவும் அவை புதுச்சேரித் தலைமைக் காரியாலயத்தால் நடத்தப்ட்டு வருவதாகவும் ஜாடியில் துண்டுப் பிரசுரங்கள் இருந்தன. வெடிகுண்டு செய்யும் முறையும் துண்டுப் பிரசுரங்களில் விவரிக்கப்பட்டிருந்தது. சில ஆணிகளும் ஊசிகளும் ஜாடிக்குள் இருந்தன. இது ‘சுதேசி’களைச் சிக்க வைக்கத் தக்க ஏற்பாடு என்பதில் சந்தேகமே இல்லை.

திறமையான கற்பனையோடு செய்யப்பட்ட இந்தச் சூழ்ச்சியில் வெட்கக்கேடான சங்கதியைக் கேளுங்கள். புதுச்சேரித் தலைமைச் சதிக்காரியாலயத்துக்கு நீலகண்ட பிரம்மசாரி தலைவராம்! அரவிந்தர், பாரதியார் போன்ற பெரியோர்கள் அந்தக் கூட்டத்தில் சாதராண அங்கத்தினர்களாம்!

பிரெஞ்சுப் போலீஸார், ‘சுதேசி’களின் வீடுகளைச் சோதனை போட்டார்கள். சோதனை அதிகாரி ஒரு பிரெஞ்சக்காரர். சுமார் இருபத்தைந்து வயது இருக்கும். இவருடைய உத்தியோக அந்தஸ்தில் இவருக்கு ‘ஜுட்ஜ் ஆன்ஸ்திரிக்ஸியோன்’ என்று பெயர். பிரிட்டிஷ் இந்தியப் ’பிராஸிக்யூட்டிங் இன்ஸ்பெக்டர்’ மாதிரி. ஆனால், இவர் மற்ற நீதிபதிகளுடன் சமமாக உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் உரிமை பெற்றவர். இவர்தான் சோதனைபோட வந்தவர்.

அரவிந்தரின் பங்களாவுக்கு வந்ததும், அவர் வழக்கமாக எழுதும் மைஜையின்பேரில் க்ரீக் புஸ்தகம் ஒன்றையும், லாடின் புஸ்தகம் ஒன்றையும் சோதனை அதிகாரி பார்த்தார். “தங்களுக்கு லாடின் தெரியும்? கிரீக் பாஷை தெரியும்-” என்று அரவிந்தரைக் கேட்டார். “ஆம்” என்றார் அரவிந்தார். அதற்குப் பிறகு சோதனையே இல்லை. அதிகாரி போய்விட்டார்.

பாரதியாரின் வீட்டுக்குப் போனார் ; நிறையக் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்தார்; அவை என்ன என்று பாரதியாரைக் கேட்டார். “இவை நான் எழுதும் கவிதைகள்” என்று பாரதியார் பதில் சொன்னார். “ தாங்கள் கவிதை எழுதுவீர்களா?” என்று சோதனை அதிகாரி கேட்டார். “ஆம்” என்றார் பாரதியார். அதோடு அந்த வீட்டிலும் சோதனை நின்றுவிட்டது. வ.வே.சு.அய்யர் வீட்டில் மட்டுந்தான் கடுமையான சோதனை நடந்தது. இரண்டு மூன்று மணி நேரத்துக்கு அதிகமாகவே சோதனை நடந்தது. ஆனால், போலீசார் எதிர்பார்த்தப்டி அவர்களக்கு வேண்டுமென்றாற்போல எதவும் கிடைக்கவில்லை.

என்றாலும் ‘சுதேசி’களின் பேரில் கேஸ் நடந்தது. இந்தக் கேஸில் சம்பந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். என் பெயர் என்ன என்று கேட்டார்கள். வ.ராமஸ்வாமி என்றேன். ‘வ.ரா. வா?’ என்று திரும்பக் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். “அப்படியானால் துண்டுப் பிரசரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ராமஸ்வாமி நீர் அல்ல” என்று முதலிலேயே என்னை விலக்கிவிட்டார்கள். அய்யர், அரவிந்தர் முதலானவர்களின்பேரில் கேஸ் நடந்து வந்தது. சுமார் இரண்டு மாத காலம் வரையில் நடந்தது.

ஒவ்வொருவராக விலக்கப்பட்டார்கள். கடைசியில் அய்யரும் நிரபராதி என்று நீதிபதிகள் தீர்ப்புச் சொன்னார்கள். முற்றுகைப் போலீஸாரின் இந்தச் சாமர்த்திய வேலையும் பலிக்காமல் போகவே அவர்கள் சிறிது காலம் எவ்வித சேஷ்டையிலும் இறங்காமல் சும்மா இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டது. ஜனங்கள் அவர்களைப் பார்த்து நையாண்டி செய்யத் தொடங்கினார்கள். தருமத்தை ஒரு நாளம் வெல்ல முடியாது என்று பேசிக்கொள்ளுவார்கள் புதுச்சேரிவாசிகள்.

இந்தச் சம்பவத்துக்ப் பின் பிரெஞ்சு சர்க்கார் அதிகாரிகளுக்குச் ‘சுதேசி’களின்பேரில் இருந்த சந்தேகம் சிறிதும் குறைந்து போய், நம்பிக்கையும் உண்டாயிற்று, என்றாலும், பிரிட்டிஷ் இந்தியப் போலீசார் மட்டும் அவர்களைக் கண்காணிப்பதைச் சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை. ‘சுதேசி’களுக்கு ஆளுக்கு இரண்டு போலீஸ்காரர்களைக் காவல் போட்டார்கள்.

நாங்கள் இநத்ச் சந்தர்ப்பத்தை கைநழுவ விடவில்லை. அவர்களுக்கு நாங்கள் சுயராஜ்யப் பிரசாரம் செய்வோம். நாங்கள் சொலவது அவ்வளவும் உண்மை என்று நினைப்பதைப் போல முகத்தை வைத்தக் கொண்டு அவர்களும் கேட்டக்கொண்டிரப்பர்ர்கள். மொத்தத்திலே இரு தரப்பாருக்கும் பொழுதுபோக்கு.

சில போலீஸ்காரர்கள், எங்களிடத்தில் வெகுவாகக் ‘கரடி‘ விட்டுப் பார்ப்பார்கள். எங்களை அப்படியே தூக்கிக் கொண்டு போகச் சில புதுச்சேரிக் காலிகள் எற்பாடு செய்துகொண்டிருப்பதாக எங்களிடம் சொல்லுவார்கள்.

மூன்றாவது தடவையாக முற்றுகைப் போலீசார் தோற்ற பிறகு ‘சுதேசி’களின் பண வருவாய் ஊற்றுகளை அடியோடு வற்றும்படியாகச் செய்துவிட்டார்கள். இந்த முயற்சியின் பயனாக, அரவிந்தரிடமும் பணமில்லாமல் போய்விட்டது. எப்படி உணவுப் பொருள்களை வாங்குவது?

நான் அப்பொழுது அரவிந்தரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். முறையாக வைத்து, இரண்டு இரண்டு பேர்களாக நாங்கள் சமைப்போம். ஒரு நாள் காலையில், சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை. காய்கறி வாங்கக்கூடப் பணமில்லை. என்ன செய்வது என்று அரவிந்தரைக் கேட்டோம் என்ன சாமான்கள் மிச்சமிருக்கின்றன என்று அவர் எங்களைக் கேட்டார்.

“அரிசி, மிளகாய் வற்றல், நல்லெண்ணெய், உப்பு” என்றோம். “சாதம் சமைத்து, மிளகாய் வற்றலைப் பொரித்து வையுங்கள்” என்றார். பொரித்த வற்றலைப் பொடியாக்கிச் சாதத்தில் கலந்து. உப்பைச் சேர்த்து, அன்றைக்குச் சாப்பிட்டோம். அரவிந்தர் மட்டும் அன்றைக்கும் வழக்கமாய்ச் சாப்பிடும் அளவு சாப்பிட்டார். அரவிந்தர் மகான் என்பதற்கத் தடை என்ன?

அடிமை நாட்டில், சிறந்த தேசபக்தர்களாகவும் மேதாவிகளாகவும் இருப்பவர்களுக்கு நேரும் கதியைச் சிந்தனை செய்து பாருங்கள். பரோடா சமஸ்தானத்தில் சுகமாக 1000 ரூபாய் சம்பளம் வாங்கியவரும், சுமார் ஒரு டஜன் பாஷைகளில் புலவரான இணையற்ற இங்கிலீஷ் எழுத்தாளர் என்ற கல்கத்தா ஹைகோட்டு நீதிபதிகளால் புகழப்பெற்றவருமான அரவிந்தர், மிளகாய் வற்றல் சாதம் சாப்பிட நேர்ந்தது என்பதைச் சாதாரணவிதிக்கு அடுக்குமா?

வற்றல் சாதம் சாப்பிட்டாலும் சாப்பிட்டார்; அன்றைக்கே அரவிந்தருக்கு யாரோ ஒரு நண்பர் இரண்டாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடுத்தார். இந்தச் சம்பவம் வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

இரே மாதிரி, பாரதியார் சம்பந்தப்பட்ட வரையில் பல தடவைகளில் நடந்திருக்கிறது. ஒரு சமயம், தென் ஆப்பிரிக்கா, டர்பனிலிருந்து பாரதியாருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தது. ஆனால் அந்தத் தொகையை ஒரு வாரத்துக்குமேல் கண்ணால் காண முடியவில்லை.

இந்த மாதிரிப் பல வகைகளிலும் அமளி நேர்ந்து கொண்டிருந்த சமயத்தில், மகத்தான நஷ்டம் ஒன்று பாரதியாருக்கு ஏற்பட்டது. அது தமிழ்நாட்டின் நஷ்டம் என்று சொல்லவும் வேண்டுமோ? ‘சின்னச் சங்கரன் கதை’ என்று பாரதியார் ஒரு புத்தகம் எழுதி அனேகமாக முடித்து வைத்திருந்தார். இருபத்தொன்பது அத்தியாயங்கள் கொண்ட நூல் அது என்பது என் ஞாபகம். அருமையான புத்தகம்!

அது எதைப்பற்றிய நூல் என்று கேட்கிறீர்களா? அது நாவல் அல்ல; பாரதியாரின் சுய சரிதமும் அல்ல; விகடம் நிறைந்தது; ஆனால் வேடிக்கைக் கதை அல்ல; புராணம் அல்ல; முழுவதும் கிண்டலுமல்ல. என்றாலும், நான் மேலே குறிப்பிட்ட எல்லா அம்சங்களும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதையே, அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு என்றுகூடச் சொல்லலாம். சோக ரஸத்தில் எழுதப்பட்ட நூல் அல்ல; நகைச்சவையும் கிண்டலும் குமிழிவிட்டுக் கொந்தளிக்கும் புத்தகம்.

பாரதியார் எதை எழுதினாலும், அதை நெருங்கிய நண்பர்களுக்குப் படித்து காண்பிக்காமல் இருப்பதில்லை ஒரு தற்பெருமை உணர்ச்சியால் எழுந்த ஆசையல்ல. நாம் எழுதும் தமிழ் பெரும்பான்மைத் தமிழர்களுக்குப் புரிய வேண்டும் என்பது பாரதியாரின் திடமான கொள்கையாகும். எனவே, தாம் எழுதினதைப் பிறர் எளிதிலே புரிந்தகொண்டு ரசிக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் படித்துக் காண்பிப்பார்.

படித்துக்கொண்டு போகும் பொழுதே, கேட்பவர்களின் முகத்தைக் கவனித்துப் பார்த்துக்கொண்டே போவார்; எந்தச் சமயத்திலாவது, அவர்களுடைய கண்கள் ஒளியிழந்து, முகம் அசட தட்டிப் பொகுமாகில், உடனே படிப்பதை நிறத்திக்கொள்வார்; அவர்களுக்கு விளங்காத வார்த்தையை உடனே எடுத்தவிட்டு, வேறு வார்த்தையை உபயோகப்படுத்துவார்; கடடினமான கருத்தாக இருந்தால் அதைத் தெளிவுபடக்கூடிய பாஷையையும் உபமானத்தையும் கைக்கொள்ளுவார்.

“சின்னச் சங்கரன் கதை’யை, அவர் படித்த நாங்கள் (சிலர்தான்) கேட்டிருக்கிறோம். சிரித்து, சிரித்து, வயிறு அறுந்து போவது மாதிரி இருக்கும், சிரிப்பினால் குடல் ஏற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று பல காலம் பயந்ததுண்டு. படீர் படீர் என்று வெடிக்கும் ஹாஸ்யமும், அந்தக் கதையில் நிறைந்து கிடந்தது. கிண்டல் என்றால் சாதாரணத் தெருக்காட்டுக் கிண்டலா? நமது ஜனங்கள் எப்படியும் வாழத்தகுமா என்ற துக்கம் தோய்ந்த கிண்லைத்தான் நாங்கள் அந்தப் புத்தகத்தில் கண்டோம்.

‘சின்னச் சங்கரன் கதை‘யின் கையெழுத்துப் பிரதி எப்படி மாயமாய் மறைந்து போய்விட்டது என்று தெரியவில்லை. முகேசன் என்ற இளைஞன் அப்பொழுது பாரதியாரின் வீட்டில் வேலை செய்துகொண்டருந்தான் அவன் திடீரென்று காணாமல் போனான். புதுச்சேரியில் அவனைக் காண முடியவில்லை. அவன் மறைந்த சமயத்தில் தான் ‘சின்னச் கிங்கரன் கதை‘யும் காணமால் போய் விட்டது. காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் விழுந்தால், காக்கைதான் அதைத் தள்ளிவிட்டது என்று ஊகிப்பது தர்க்க சாஸ்திரமல்லவா? அந்தத் தர்க்க முறையை ஒட்டி, முகேசன்தான் குற்றவாளி என்று எங்களில் சிலர் எண்ணத் துணிந்தார்கள்.

இதைக் கேட்டதும் பாரதியாருக்கு வந்த கோபத்துக்கு எல்லையே இல்லை. எங்களைக் கடிந்து பேசினார்; முருகேசனைப் புகழ்ந்தார். ஓர் இடத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகித்தால், அந்த வீடோ ஸ்தாபனமோ ஒரு நாளும் உருப்படாது என்று எங்களுக்கு எடுத்துக் காண்பித்தார். இருந்தாலும், “முருகேசன் ‘நிரபராதி‘ என்று எப்படி நிச்சயமாகச் சொல்ல முடியும்? அவன் ஏன் ஒரு வாரமாக வேலைக்கு வரவில்லை? அவனைப் புதுச்சேரியில் காணோமே!” என்று நாங்களும் விடாப்பிடியாகக் கேட்டோம்.

பாரதியாரின் மனம் மாறவில்லை. ஆனால், அவர் மௌனமாக இருந்துவிட்டார். சுமார் நாற்பது நாள் கழித்து, முருகேசன் தோன்றினான். அவன் எலும்புந்தோலுமாக இருந்தான். அவனை அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

நாற்பது நாள்களுக்குள் அவன் எப்படிச் சோளக்கொல்லைப் பொம்மை போல ஆனான் என்ற நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தோம். காலை நேரம். பாரதியார் அப்பொழுது படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. முருகேசனை, நாங்கள் பாதி அனுதாபத்தோடும் பாதி சந்தேத்தோடும் பார்த்துக்கொண்டிருந்தான்.

திடீரென்று பாரதியார் அங்கே வந்துவிட்டார். உடனே முருகேசன், தேங்கிக்கிடந்த நீர், அணையை உடைத்துக்கொண்டு பிரவாகமாவது போலத் தேம்பித் தேம்பி அழுதான். பாரதியார் எங்களை ஒருமுறை பார்த்தார்; மின்னலைப் போலப் பாய்ந்த முருகேசனைக் கட்டி அணைத்துக்கொண்டு, “எதற்காகடா அழுகிறது? குடிமுழுகிப் போய்விட்டதா ஆண் பிள்ளைகள் அழப்படுமோ? “ என்று சொல்லி அவனைத் தேற்றினார்.

இதைப் பார்த்து நாங்கள் திகைத்துப் போனோம். “ஏண்டா முருகேசா! நீ எங்கேடா போயிருந்தாய்? இந்திரஜித் மாதிரி திடீரென்று மறைந்துபோய் விட்டாயே!” என்று சிரித்துக்கொண்டே பாரதியார் கேட்டார்.

முருகேசன் அழுகையயை நிறுத்திக்கொண்டு, பின் வருமாறு சொன்னான் : “பிரிட்டிஷ் இந்தியப் போலீஸில் ஒருத்தர் என்னோடு அடிக்கடி பேசிக்கொண்டு, அன்பாக இருந்தார். ‘வா தம்பி, விழுப்புரத்துக்கு‘ என்று கூப்பிட்டார். தமாஷாகப் போய் வரலாம் என்று எண்ணி, அவரை நம்பி, அவரோட ரயிலில் போனேன். விழுப்புரம் போனதும் என்னை ‘அரஸ்ட்‘ செய்திருப்பதாகச் சொன்னார். என்னைப் பட்டணத்துக்குக் கொண்டு போனார்கள்; என் உடம்பை நன்றாகத் துவட்டி எடுத்து விட்டார்கள். ‘பாரதி வீட்டிலே வேலை செய்கிறாயே, அவரைப் பற்றி உனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லு‘ என்றார்கள். ‘அற்பப் படிப்புள்ள எனக்குங்கூட விளங்கும்படியாக, தமிழ்க்கவிதை எழுதுகிறார்‘ என்றேன். ‘இதைச் சொல்லுவதற்குத்தான் உன்னைச் சென்னைக்குக் கூட்டி வந்ததோ:” என்று என்னை, எப்படி எப்படியோ அடித்து உதைத்து இம்சை செய்தார்கள். ஒரு மாதம் காவலில் வைத்திருந்து என்னை விடுதலை செய்தார்கள். புதுச்சேரிக்கு டிக்கெட்கூட வாங்கிக் கொடுக்கவில்லை. சென்னையில் ஓர் உறவினரிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு புதுச்சேரிக்கு வந்தேன்!“

இதைக் கேட்டதும் பாரதியார் நிரம்பவும் வருத்தப் பட்டார். ஆனால் நாங்களோ, இது வெறும் அளப்பு என்று தீர்மானித்துவிட்டோம். போலீசார் அம்மாதிரி செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையால அல்ல. முருகேசன், கதை சொன்ன தோரணை ஒழுங்கயில்லை என்று சந்தேகப்பட்டோம். என்றாலும், அன்றைய தினத்திலிருந்து, முருகேசன் தம் வீட்டில் வேலை பார்க்கலாம் என்று சொல்லி, பாரதியார் அவனைத் திரும்பவும் அழைத்துக்கொண்டார்.

பாரதியாரின் தாராளமனப்பான்மையைக் கண்டு திகைத்துப்போனோம். ஆனால், அதைப் பாராட்டி அனுபவிக்க முடியவில்லை. முருகேசன் கையெழுத்துப் பிரதியைப் பேலீஸாரிடம் கொடுக்கவில்லை, கொடுத்திருக்க மாட்டான் என்று பாரதியார் நம்பினாரேயொழிய ‘சின்னச் சங்கரன் கதை’ போலீஸாரிடம் எப்படியோ போய்ச் சேர்ந்துவிட்டது என்பதில் பாரதியாருக்குத் துளிக்கூடச் சந்தேகம் எற்படவில்லை. நாங்களோ பாரதியார் எண்ணியது போல இரண்டு வகைகளிலும் எண்ணவில்லை.

கதை கெட்டுப் போனதைக் குறித்து எங்கள் எல்லோருக்கும் நிரம்ப வருத்தந்தான். திரும்பவும் அதை எழுதக்கூடாதா என்று நாங்கள் பாரதியரைக் கேட்டுக்கொண்டோம். ஐந்தாறு அத்தியாயங்கள் எழுதினார்; அதற்குப் பின் மனது செல்லவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார், ‘சின்னச் சங்கரன் கதை’யைப் பற்றி அவர் பிறகு பிரஸ்தாபம் செய்ததேயில்லை. திருத்தி எழுதிய ஐந்தாறு அத்தியாயங்களும் ஸ்ரீசுப்பிரமணிய சிவம் நடத்தி வந்த ‘ஞான பானு’ பத்திரிகையில் பிரசுராயின. அவ்வளவுதான். தமிழ்நாடு, ஆறு அத்தியாயங்களோடு திருப்தியடை வேண்டிய மகத்தான துர்ப்பாக்கியத்துக்கு ஆளானது தான் மிகுதியும் வருந்தத்தக்கது.

பாரதியார் கோழை என்று சில முட்டாள்கள் அப்பொழுது வாக்குள் முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பாரதியாரின் தன்மை தெரியாமல் போனது ஆச்சிரியமாகும். வ.வே.சு. அய்யர் சீமையிலிருந்து மாறுவேஷம் தரித்து, இந்தியப் போலீஸாரின் கையில் சிக்கிக் கொள்ளாமல், புதுச்சேரி வந்து சேர்ந்தததை ரொம்ப வக்கணையுடன் வர்ணத்துவிட்டு, இந்த மாதிரி பாரதியால செய்ய முடியுமா என்பது போலப் பெசிக்கொள்வார்கள். வ.வே.சு. அய்யர் செய்தது அபாரமான வேலை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதற்காக, பாரதியாரின் தைரியத்தைக் குறைத்துப் பேச வேண்டும் என்பதுண்டா?

காலஞ்சென்ற கொடியாலம் வா. ரங்கசாமி அய்யங்கார் அருமையான தேசபக்தர். திருச்சி ஜில்லாவில் அவர்களுடைய குடும்பம் மிகவும் பிரசித்திபெற்ற குடும்பம். பெருத்த பூமியாளர்கள். சென்னைக் கவர்னர்கள் திருச்சிக்கு விஜயம் செய்தால், இவர்களுடைய குடும்பத்தார்களுக்குத்தான் முதல் பேட்டி அளிப்பார்கள். இரண்டு வகைகளிலும் செல்வாக்குப் படைத்த குடும்பத்தைச் சேர்ந்த ரங்கசாமி அய்யங்கார், கள்ளி வயிற்றில் அகில் பிறப்பது போல, அருமையான தேசபக்தராகத் தோன்றினார். தம்முடைய தேசாபிமானத்தை, அவர் பல வகைகளிலும் காண்பித்திருக்கிறார்.

அய்யங்கார் அவர்களுக்கு அரவிந்தரிடம் அளவு கடந்த பக்தி; வ.வே.சு. அய்யரிடம் மரியாதை. பாரதியார் தேச பக்தர் என்ற முறையில் தான் அய்யங்காருக்கு அவரிடம் வாஞ்சை. பாதியாரின் அற்புதக் கவிதை திறனை 1943 ஆம் ஆண்டில்கூட உயரமுடியாத பிரகஸ்பதிகள் தமிழ்நாட்டில் இருக்கும்பொழுது அய்யங்கார் 1910 – 1912இல் பாரதியாரின் ஈடுஜோடி இல்லாத மேதையை அறிந்துகொள்ள முடியுமா?

அடிமைப்பட்டுக் கிடந்த கிரேக்கர்களைத் தட்டி எழுப்புவதற்காக, லார்ட் பைரன் என்ற ஆங்கிலக் கவி “ஐஸ் ஆப் கிரிஸ்” என்ற அரமையான விடுதலைக் கவிதை ஆவேசத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கவிதையை ஆயிரக்கணக்கில் அச்சடித்து, இதே அய்யங்கார், இனாமாக எல்லோருக்கும் கொடுத்திருக்கிறார். அய்யங்கார் சுதந்தர ஆர்வங்கொண்டவர்; என்றாலும், பாரதியாரின் பெருமையை உணர முடியாத நிலையில் இருந்தார்.

இவரைப் போலவே, ஆயிரக்கணக்கான தமிழர்கள் சுதந்தரப் பிரியர்கள், தமிழில் பற்று இல்லாமல் இன்னமும் இருக்கும் பொழுது, அக்காலத்தில் அருமையான தேசபக்தராயிருந்த அய்யங்காரிடம் காணுவது வீணான வேலை.

பாரதியாரிடம் மதிப்பு அதிகமில்லாத அய்யங்காரே பிரமித்துப் போகும்படியாகப் பாரதியார் ஒரு காரியம் செய்துவிட்டார். தஞ்சாவூர் ஜில்லாவில், மன்னார்குடிக்கு அருகில், நாகை ( நாகப்பட்டணம் அல்ல) என்று ஒரு சிறு கிராமம் இருக்கிறது. அங்கே ரங்கசாமி அய்யங்காருக்கு ஒரு நேர்த்தியான பங்களா இருந்தது. அய்யங்கார் நாகைக்கு அடிக்கடி போய், அங்கு பல நாள்கள் தங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு சமயம் அய்யங்கார் அங்கே இருக்கும்பொழுது நடந்த சம்பவத்தை, அவர் என்னிடம் சொன்னார்.

அய்யங்கார் என்னிடம் சொன்னதாவது; “ஒரு காலையில் பதினொரு மணிக்குச் சாப்பாடு முடிந்து, நான் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்! ஒரு மணி நேரம் சம்பாஷித்துக் கொண்டிருந்திருப்போம். குதிரை வண்டி ஒன்று பங்களா வாசலில் வந்து நின்றது. வண்டியில் ஒருவர் மட்டும் இருந்தார். மூட்டை முடிச்சு ஒன்றுமில்லை; அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி வந்தார்.

தலை வழுக்கை; மீசை இல்லை. பித்தான் இல்லாத ஷர்ட்டு. அதன் மேலே ஒரு கோட்டு. இடுப்பில் பஞ்சகச்சம்; தோளிலே அழகான சரிகை வேஷ்டி. வண்டியிலிருந்து இறங்கி, அவர் வேகமாகப் பங்களாவின் படி ஏறி வந்தார். முதலில் எனக்கு அடையாளம் புரியவில்லை. நிதானித்துப் பார்த்தேன். பாரதி ! எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மீசையை அவர் எடுத்துவிட்டதால், சட்டென்று அடையாளம் தெரியவில்லை. கூட இருந்த நண்பர்களுக்குப் பாரதி என்று தெரியக்கூடாது என்று, ‘வாருங்கோ’ என்று பாரதியை மெத்தைக்கு அழைத்துக்கொண்டு போனேன்.

அப்பொழுது பாரதிபேரில் வாரண்டு இருந்தது. புதுச்சேரியிலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போலீஸ்காரர்களுக்கும் அவரை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமல்ல. அப்படியிருந்தும் பாரதி என்னமாய் நாகைக்கு வர முடிந்தது? அய்யர் சீமையிலிருந்து மாறுவேஷத்தோடு வந்ததுகூட என் கண்ணில் பெரியதாகப் படவில்லை. அய்யரை, இந்தியாவில் போலீஸாருக்குத் தெரியாது. பாரதியை எல்லோருக்கும் நன்றாகத் தெரியுமே!

“அப்படியிருக்க, அவர்களின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவிவிட்டு, அவர் எப்படி வர முடிந்தது? பாரதிக்குத் தைரியம் அதிகமாக இருக்காது என்று நான் எண்ணினது நிரம் அசட்டத்தனம் என்பது எனக்கு அப்பொழுது நன்றாகத் தெரிந்தது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ, யார் கண்டார்கள் என்ற பெரியவாள் சொல்லுவது உண்மைதான். மனுஷாளை மதித்பிடும் பொழுது நிரம்ப உஷாராயிருக்கணும் என்கிற புத்தி அப்பொழுது எனக்கு அழுத்தமாக ஏற்பட்டது.

“பாரதி ஒரு வாரம் வரையில் என்னோடு நாகையில் தங்கியிருந்தார். சுந்தரமய்யர் என்று பெயர் என்று சொல்லி, அவரை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். பாரதி தங்கியிருந்த ஒரு வாரமும் ஒரே சிரிப்பும் குதூகலமுந்தான். அரசியலைப்பற்றி அவர் அப்பொழுது பேசவே இல்லை; தினமும் பாடுவார். நண்பர்கள் எல்லோரும் அவரிடம் ஈடுபட்டுப் போனார்கள்.“

ரங்கசாமி அய்யங்கார் இவ்வாறு என்னிடம் சொன்னார். பாரதியார் நாகைக்கு வந்திருந்தார் என்று பின்னால் அவரே நண்பர்களுக்குச் சொல்லி, அதை விளம்பரப்படுத்திவிட்டார். பாரதியாரின் துணிவும் ஸாகசமும் எவ்வளவு வரையில் இருந்தன என்பதை இந்தச் சம்பவம் காண்பிக்கின்றது. இது சம்பந்தமாக அதிகமாய் விவரித்துச் சொல்ல எனக்கு மனமில்லை.

மரியாதைக்கும் வினயத்துக்கும் இருப்பிடம் என்று சொல்லக்கூடிய பாரதியார் சில சமயங்களில் ‘நாக்கில் நரம்பில்லாமல் ‘ பேசிவிடுவார். அவ்வாறு நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்று சொல்லத் தகுந்தது.

புதுச்சேரிக் கடற்கரையில், பியரில் (பியர், கடலில் கட்டப்பட்ட பாலம் ; இது சுமார் ஒன்றரைப் பர்லாங்கு இருக்கும். கப்பலில் வரும் சாமான்களைப் பியரில்தான் இறக்குவார்கள். ) ஆனந்தமாகக் காற்று வாங்கிக் கொண்டிருந்தோம். (விலை கொடுத்து வாங்கவில்லை!) பாரதியார் அருமையாகப் பாடிக்கொண்டிருந்தார். அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரக்கு நண்பரான திருச்சி வக்கீல் ஒருவர் (ரொம்ப பிரபஸ்தர்) எங்களுடன் இருந்தார்.

பாட்டு முடிந்ததும் அந்த வக்கீல் பேச ஆரம்பித்தார். “ஏன் சார்! ஒங்க டிலக் இப்போ எங்கே இருக்கான் ?“ என்று வ.வே.சு. அய்யரை அவர் கேட்டார். டிலக் என்று சொன்னது லோக மான்ய திலகரை. அய்யரின் முகம் சிவந்து போயிற்று. அவர் தமது ஆத்திரத்தை அடக்கிக்கொண்டார். ஆனால், பாரதியார் ஒரே வெடியாக வெடித்துவிட்டார். கடகடவென்று அவர் கொட்டத் தொடங்கினார்.

“ஏண்டா ! நீ தமிழன் இல்லையா? நீ வெள்ளைக்காரனா! என்னடா ‘டிலக்‘ வேண்டியிருக்கு? திலகர் என்று சொல்ல உன் நாக்கு கூசுகிறதா? எங்கள் திலகர் தலைவர், உங்கள் விட்டு மாட்டுக்காரனா? அவன் இவன் என்று அந்த மகானை, மரியதையில்லாமல் பேசுகிறாய். முழுமூடா!“ என்று நிரம்பக் கேவலமாகப் பேசிவிட்டார்.

வக்கீலின் முகம் அப்படியே வெளுத்துப்பொய் விட்டது, வக்கீல் வேண்டுமென்றே மாரியதைக் குறைவாகப் பேசவில்லை என்று பின்னால் தெரிந்தது. தமிழ்நாடுப் பிராமணர்களுக்குள் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பிரசன்னமாக இல்லாத பேர்வழியை, அவன் இவன் என்று ஏக வசனத்தில், மரியதையில்லாமல் சொல்லுவது, இந்தக் கூட்டத்தாருக்கு ஒரு கெட்ட பழக்கம். இந்தப் பழக்கத்தக்குப் பலியானவர் வக்கில் அவ்வளவுதான்.

வக்கீல் நிரம்பவும் மன வேதனை அடைந்தார்; மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அப்பொழுது பாரதியாரைப் பார்க்க வேண்டுமே அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. மனத்தில் நிரம்பவும் சிரமப் பட்டுப் போனார். “நீங்கள் செய்தது அறியாப் பிழை என்று தெரிந்துகொண்டதால், எனக்கு ஒரு புறம் வருத்தம்; ஒரு புறம் சந்தோஷம். நீங்கள் வேண்டுமென்றே உதசீனமாகச் சொல்லிவிட்டீர்களோ என்று எண்ணி, நான் சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டேன். தயை செய்து மன்னித்துவிடுங்கள் “ என்று பாரதியார் மிகவும் அங்கலாத்துக்கொண்டு சொன்னார்.

பாரதியாரைப் பற்றிச் சில இடங்களில் எப்படி எப்படியே தவறாக அபிப்பிராயங்கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். பாரதியாரின் உண்மையான தன்மை இப்படிப்பட்டது என்பதைச் சந்தேசமில்லாமல் தெரிந்துகொள்ளுவதற்காகவே மேலே சொன்ன சம்பவங்களை நான் குறிப்பிட்டேன்.

                 
16

Website Designed by Bharathi Sangam, Thanjavur