மகாகவி பாரதியார்
(வ.ரா.)

                 
20

பாரதியார் பிறந்த காலம் தமிழ்நாடு சம்பந்தப்பட்ட வரையில் வினோதமான காலம். நகர நெருக்கடி தோன்றாத காலம். கிராமம் பாழாகாத காலம். பஞ்சமும் பருவ மழையும் ஆண்டவனது லீலைச் சோதனைகள் என்று ஆலோசனை செய்யாமல் மக்கள் அலறிக்கொண்டிருந்த காலம். காபி என்பதே தெரியாத காலம். காலணா நாணத்தைக் கையில் வைத்துச் சுண்டிச் சுண்டி அழகு பார்த்த காலம். தானியங்களின் அகவிலை ஏறாத காலம். தேரும் திருவிழவும் தெருக்கூத்துகளும் ஜனங்களுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்த காலம். ஜோசியம் சொல்லும் வள்ளுவர்கள், உயர்ந்த படிப்பாளிக்குக்கூடத் தாசில் உத்தியோகத்துக்கு மேலே சொல்லத் தெரியாத காலம். ‘ஐகோர்ட்டு பாரிஸ்டர்‘ என்று வெகு மரியாதையுடன், தெவலோகப் பிறவியைப் பற்றிப் பேசுவதைப் போல, காதோடு காது வைத்த கைகளையும் காதுகளையும் மார்புகளையும் அலங்காரம் செய்யாத காலம். பருத்திப் புடைவையைத் தவிர, பட்டுப் புடைவையை அதிகமாக அறியாத காலம்.

கதாகாலட்சேபங்கள் மூலமாகக் கல்வியைக் கேட்ட காலம். பரத நாட்டியத்தைப் பரத்தையர் மட்டும் ஆவலுடன் ஆதரித்துப் போற்றிவந்த காலம். போன உயிரைத் திருப்பிக் கொண்டுவந்த காலம். போன உயிரைத் திருப்பிக்கொண்டுவரும் வித்தையைத் தவிர வேறு எல்லா வித்தைகளிலும் கைதேர்ந்த வெள்ளைக்காரன் என்று இங்கிலீஷ்காரனை வாயாரப் புகழ்ந்த காலம். விக்டோரியா மகாராணி காலத்தில விபரீதம் எதாவது தோன்ற முடியுமா என்று ராஜபக்தி ஓங்கி நின்ற காலம். கிராமத்தில் சேர்நத்ற்போல ஆயிரம் ரூபாயைப் பார்க்கமுடியாத காலம். நோட்டுகள் மலியாத காலம். வயிற்றுப்பிழைப்பிற்கு வேறு என்ன வழி என்று வயிற்றுப் பிழைப்பைப் பெரிய பிரச்சினையாகப் பேசிவந்த காலம். ‘கோச்சு வண்டி‘ இரட்டைக் குதிரை சாரட்டுப் பேர்வழிகளைச் சிறு குபேரர்களாக மதித்து மயங்கிய காலம்.

இந்தக் காலத்திலே தமிழர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? தாயுமானவர், ‘யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும், உறங்குவதுமாக முடியும்‘ என்று பாடியிருக்கிறாரே, அவ்வாறே தமிழர்களின் வாழ்க்கை நடைபெற்றது. கலையைப் பற்றித் தமிழர்களுக்குக் கவலையா? கல்வியைப் பற்றிக் கவலையா? பொன்னைப்பற்றிக் கவலையா? அரசியலைப்பற்றிக் கவலையா? கவிதையைப்பற்றி அவர்கள் யோசித்ததுண்டா? தமிழ்மொழி, தோல் சுருக்கம் காணுவதைப் போலச் சுருக்கம் கண்டு வந்ததைப் பற்றி அவர்கள் சிந்தனை செய்தார்களா? கைத்தொழில்களைப்பற்றி அவர்கள் கவலைப்பட்டார்களா? ‘ஆண்டவனுடைய பிரதிநிதியாக, ஆங்கிலேயன் இந்த நாட்டின் அரசியல் பொறுப்பை ஏற்று, நீதித் தராசைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கும் வரையில், நமக்கென்ன கவலை?‘ என்று அவர்கள் பிதற்றிக்கொண்டிருந்தார்கள்.

கையில் நீதித் தராசைப் பிடித்துக்கொண்டிருக்கும் இங்கிலீஷ்காரன், ‘தன் பையில் பணம் நிரம்புகிறதா என்பதைத்தான் தனது லட்சியமாகக் கொண்டிருந்தான்‘ என்று அப்பொழுது யாரேனும் தமிழர்களிடம் சொல்லி, தண்டப் பிரயோகம் பெறாமல் தப்பித்துக் கொள்ள முடியுமா? “நம்முடைய மதத்தில் அவர்கள் தலையிடுகிறார்களா? நமது பெண்களை அவர்கள் கலியாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களா? நம்முடைய ஆசாரங்களை அவர்கள் கெடுக்கிறார்களா? ஏதோ கொஞ்சம் பணம் எடுத்துக்கொள்ளுகிறார்கள். அதனாலென்ன? தேன் எடுப்பவன் புறங்கையயை நக்காமல் இருப்பானா?“ என்று இங்கிலீஷ்காரர்களுக்குப் பரிந்து பேசும் கூட்டந்தான் இந்த நாட்டில் பெரும்பான்மையாய் இருந்தது. வெள்ளைக்காரர்களைப் போல இருக்க வேண்டும் என்று பொதுவாக எல்லாரும் ஆசைப்பட்டார்கள்; அதற்கு ஆரம்ப அஸ்திவாரமாக, இங்கிலீஷ் படிப்பதில் அளவற்ற மோகங்கொண்டார்கள்.

நாட்டிலோ தரித்திரம் தாண்டவமாடுகிறது. இத்தச் சமயத்தில் சீமையிலிருந்து சுகபோக வாழ்வுக்கு ஏற்ற சாமான்களை, இங்கிலீஷ்காரர்கள் இந்த நாட்டில் கொண்டுவந்து ஏற்றினார்கள். இவைகைளை அனுபவிக்கும் ஆசை, தமிழர்களின் உள்ளத்தில் உதிப்பது இயற்கைதானே? ஆனால், ‘சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்‘ என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிட்டார்கள். சாமான்களை வாங்குவதற்குச் செல்வ நிலை சரியாக இருக்க வேண்டாவா? ஆனால், இதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஆண்டவன் படைத்த இந்த மண்ணுலகில் மனுஷன் கவலைப் பட்டுச் செய்கின்ற காரியம் எதுவுமே இல்லை என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டார்கள்.

இதன் பயன் என்ன? பொறுப்பு உணர்ச்சியும் சோதனைத் திறனும் தமிழர்களை விட்டுவிட்டுப் போய்விட்டன. எந்த வகையிலும், எதற்காகவும் பொறுப்பை எற்க மனமில்லாத நிலைக்குத் தமிழர்கள் வந்துவிட்டார்கள். ‘முள்ளைத் தைத்துக்கொண்டேன்‘ என்று சொல்வதுதான் முறையும் உண்மையுமாகும். ஆனால், பொறுப்பை எற்க மனமில்லாத தமிழன், ‘முள் தைத்து விட்டது‘ என்று முள்ளின்பேரில் பழியைப் போட்டு, அந்த விஷயத்தில் தனக்குச் சிறிதளவுசுடப் பொறுப்பில்லாதது போலப் பேசும் ஆச்சரியத்தைப் பாருங்கள்.

பொறுப்பற்ற, சதந்தரமில்லாத வாழ்வுக்கு, சோம்பலே ஆட்சி புரியும் வாழ்வுக்குச் சுகவாழ்வு என்று பெயர் கொடுத்து அழைத்து, தமிழன் அகமகிழ்ந்தான். சோலுள்ளவன் செயல் செய்வானா? கைச் சுண்டுவிரலைச்கூட அவன் அசைக்க மாட்டான். உழைப்பின் மூலமாக எதையும் பெற முடியும் என்பதில் அவனக்கு நம்பிக்கை இருந்தால்தானே? ஆனால், அவன் உழைப்புக்கு ஒரு மாற்று கண்டுபிடித்து அகமகிழ்ந்தான், அதன் பெயர்தான் அதிருஷ்டம்.

இந்த அதிருண்டம் என்ற பொய்க்கு வேறு பெயர்களும் உண்டு. காலம் என்று ஒரு பெயர். திருவருள் என்று இன்னொரு பெயர். லக்ஷ்மிகடாட்சம் என்று மற்றொரு பெயர். ஈசன் கருணை என்று பிறிதொரு நாமதேயம். இவ்வாறு அசடு என்ற படுகுழியில் அவன் வீழ்ந்தான். பிறருடைய செயலால்தான், தான் நன்மை அடைந்து, முன்னேறிச் சுக வாழ்வு வாழ முடியும் என்று திடமாக நம்பின தமிழனை, விதிப் பிசாசு வேறு கெட்டியாக பிடித்துக்கொண்டது. இப்பேர்ப்பட்ட நிலைமையில் இருந்த தமிழர்களை அடக்கி ஆள வேண்டிய அவசியமே இல்லை. அடக்குவதற்கு என்ன எதிர்ப்பு இருக்கிறது? யார் உருட்டினாலும் பந்து உருண்டு கொண்டே போகும். இதைப் போலவே, தமிழர்களின் வாழ்வும் கண்ட அன்னியர்கள் எல்லாம் தமிழர்களின் வாழ்வைப் பந்தாடிவிட்டார்கள்.

தங்களுடையது என்று உள்ளப் பூரிப்போடும் கர்வத்தோடும் தமிழர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக, எதுவும் அவர்களுக்குக் கிடையாது என்று தமிழ்நாட்டில் செய்யப்பட்ட பொய்யான பிரசாரத்துக்கு தமிழர்கள் பலியானார்கள். இந்தப் பிசாரம்கூட, இங்கிலீஷிலும் பிறமொழிகளின் மூலமாயுந்தான் செய்யப்பட்டது. தமிழ்ப் பாஷையைத் தமிழர்களே அலட்சியம் செய்தார்கள; ‘தமிழ் கற்றால், அது வயிற்றுக்குச் சோறு போடுமா? இடுப்புக்குக் கட்டத் துணி கொடுக்குமா?‘ என்று அசடு வழியும் ஆபாசக் குப்பைகளைக் கிளப்பினார்கள்; காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை அடியோடு மறந்து போனார்கள்; முக்திக்குப் பதிலாக, சர்க்கார் உத்தியோகமே மோக்ஷம் என்று வாதாடத் துணிந்தார்கள்.

தன்னம்பிக்கையும் சுதந்தர தாகமும் சயமரியாதையும் தமிழர்களின் இதயக்கண் முன்னே காட்சி அளிக்க மறுத்துவிட்டன. பராதீனம் என்பது பழுத்த கனியாகிவிட்டது. கைவிரிப்பும் பெருமூச்சுந்தாம் கண்ட பலன்கள்.

பாலைவனத்தில் காணும் நீர்ச்சுனைகளைப் போல, சிரின் உள்ளத்தில் தமிழன் என்ற பெருமை உணர்ச்சி உற்றுப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் செயலற்றசாதுக்களாக வாழ்ந்தார்கள்

கடவுளை விகானந்தர் தமது இளம்பிராயத்தில் நம்பவில்லை. இந்த மனப்பான்மையோடு, அவர் ராம கிருஷ்ண பரமஹம்ஸரை நாடினார்: கடவுள் இருக்கிறாரா என்று பரமஹம்ஸரைக் கேட்டார். இருக்கிறார் என்றார் அவர். ‘தங்களால் எங்களுக்குக் கடவுளைக் காண்பிக்க முடியுமா?“ என்று கேட்டார் விவேகானந்தர். ‘ஆனந்தமாய்க் காண்பிப்பேன்‘ என்ற பரமஹம்ஸர் சொன்னதைக் கேட்டு விவேனாந்தரின் பார்வை அடியோடு மாறிவிட்டது. பரமஹம்ஸர் வெறும் சன்னியாசி சாதுவாக இருந்திருந்தால், அவர் சவாமி விவேகான்தரின் மனத்தைச் சிறிதளவுகூட மாற்றியிருக்க முடியாது.

தமிழன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த சிலர், வெறும் சாதுக்களாக வாழ்ந்ததால், அவர்களால் தமிழர்களின் இதயத்தைத் தொட்டு, பெருவாழ்வு என்ற இன்ப விளக்கை ஏற்றிவைக்க முடியவில்லை. ‘ஏதோ பொழுது போகவில்லை போலிருக்கு. தமிழனது பெருமையைப் பற்றியக் கதை கதைக்கிறார்கள்’ என்று ஏளனக்குரலில், அந்தச் சாதுக்களைக் கேலி செய்தார்கள் மற்றவர்கள்.

தமிழர்களின் இத்தகைய பரிதாபகரமான மனநிலைமைய மாற்ற வெறும் சாதுக்களால் முடியுமா? முப்பாலும் பாழாகி, அதற்கப்பால் படர்ந்தொளி திகழும் பரமனின் பாதமே கதி என்று சொல்லும் வேதாந்தியும், உலகமே நிலையில்லாததென்ற சொல்லித் தனக்கு மட்டும் அறுசுவை உண்டி வேண்டும் ஆண்டிப் பண்டாரமும் தமிழர்களைத் தட்டி எழுப்ப முடியாது. தமிழனைத் தட்டி எழுப்பி, அவனை முன்னேறச் செய்பவர் திடசங்கற்பமுள்ளவராக இருக்க வேண்டும்; தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர், கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாடவேண்டும். குழந்தைக்குத் தோழனாகவும், பெண்மைக்குப் பக்தனாகவும், அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும், சுதந்தரத்துக்கு ஊற்றுக்கண்ணாகவும், சுற்றி நில்லாதே போ பகையே என்னும் அமுத வாய் படைத்த ஆண் மகனாகவும், கவிதைக்குத் தங்குமிடமாகவும், உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப்பெற்றவனாகவும் எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் தூங்கும் தமிழ் நாட்டைத் தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன்.

இப்பேர்ப்பட்ட முர்த்திகரம் வாய்ந்த பாரதியார், தமிழ்நாட்டில் தோற்றியிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தனை செய்வதே சிரமமான வேலையாகும். அழுகிப்போன வாழைச்சிங்கம் வளர்வதை நீங்கள் பார்த்திருக்கிகறீர்களா? “ அழுகின சிங்கமா இவ்வளவு வாளிப்போடு வளர்ந்திருக்கிறது!“ என்று வியப்படையும் படியாக அது வளர்ந்திருக்கும். அந்த இயற்கை எழில் காட்சியைப் போல, பாரதியார் தமிழ்நாட்டில் தோன்றினார். தமிழர்களின் வாழ்க்கை அழுகிப்போனது. அது அடியோடு மறைவதற்காக அல்லவென்பதையும், அது மறுமலர்ச்சியின் ஆணித்தரமான விதையின் வீர்யம் என்பதையும், நாம் பாரதியாரின் தோற்றத்திலிருந்து கண்டுகொண்டோம்.

“ பொழுது புலர்ந்தது யாம்செய் தவத்தால்
புன்மை இருள்கணம் போயின யாவும்“

பொழுது புலர்ந்ததையும் புன்மை இருட்கணம் போனதையும் பாரதியார், தமது இளம்பிராயத்திலேயே, தாம் சம்பந்தப்பட்ட வரைக்கும் தெளிவாகத் தெரிந்து கொண்டா. அனாயாசமாகக் கவிபாடும் திறன் தம்மிடமிருப்பதைக் கண்டு அவர் அகம்பாவம் அடையவில்லை; அந்தத் திறனைத் தமது தாய்நாட்டின் உய்வுக்காக அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று துணிபு கொண்டார்; தீர்மானங்கொண்டார், பள்ளிப் படிப்பில் அவருக்கு அக்கறை இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.

இளம்பிராத்திலேயே தமது இலட்சியம் இன்னது என்று தெரிந்துகொண்டதால், அதற்கான சாதனம் இன்னவைதாம் என்று எளிதிலே தெரிந்துகொள்ளவும் அவரால் முடிந்தது. மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் அந்தத் திருப்பணியில் சேர்த்துப் பிணைத்து விட்டார்.

தமிழர்களைத் தமிழ்மொழி மூலமாகத்தான் உயர்த்த முடியும் என்ற உண்மையை ஓர்ந்தார்; தமிழுக்குத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்டார். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் ‘என்று யாரோ பேதை அவதூறு பேசியது அவரது உள்ளத்தில் சுருக்கொன்று தைத்தது. வந்த அவதூறைப் பொய்யாக்க வேண்டும் என்று மனத்தில் உறுதிகொண்டார்; இந்தக் கைங்கர்யத்திலேதான் அவர் மறையும் வரையில் ஈடுபட்டிருந்தார்.

உலக இலக்கியமனைத்தையும், உலக இயக்கங்கள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தார்; பசையான ஒன்று அவைகளில் எதில் கண்ணில் பட்டாலும், அதைத் தமிழோடு சேர்த்து ஒட்டிக்கொள்ளும்படியாகச் செய்து வந்தார்.

தேக்கமடைந்து கிடக்கும் தமிழர்களின் சமூகம் ஏன் தேக்கமுற்று இருக்க வேண்டும் என்பதைப் பற்றிக் குடைந்து குடைந்து ஆராய்ச்சி செய்தார்; அச்சமே முக்கிய காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார்; அறிவுப் பெருக்கமில்லாமை மற்றொரு காரணம் என்பதையும் கண்டார்; எனவே, அறிவை வளர்ப்பதற்கும் அச்சத்தைப் போக்குவதற்கும் பல துறைகளிலும் பாடுபட்டார்.

கவிதை எழுதினார்; கட்டுரை எழுதினார்; தர்க்கம் செய்தார்; தட்டிக்கொடுத்தார்; வீணர்களைக் கண்டால் வெட்டிப் பேசுவார்; பலவீணர்களிடம் கருணையையும், போக்கிரிகளிடம் கடுமையையும் காண்பிப்பார்; தம்மை ஆரம்பப்பள்ளி வாத்தியாராகக் கருதிக்கொண்டு, பொறுமையை இழக்காமல் மக்களுக்குப் போதித்து வந்தார்.

தமிழருக்கு வசன நடை புதிது ஆனதாலும், பெரும்பான்மையான தமிழர்களுக்குக் கல்விப் பழக்கம் இல்லாததாலும் அவர்களுக்குப் பண்டிதர்களின் உதவியில்லாமல், படித்தவர்களின் தூண்டுதல் இல்லாமல், புரியும்படியான தமிழை எழுதினார்; அப்படியே மற்றவர்களும் எழுதவேண்டும் என்று தமது வாழ்நாள் முழுவதும் வற்புறுத்தி வந்தார்.

மேல்நாட்டு அறிவுநூல்களைத் தமிழ்ப்படுத்துவதில் அக்கறை காண்பித்து, எவ்வளவு தம்மால் முடியுமோ அவ்வளவு வரையில் அவர் உழைத்தார்; அர்த்தமற்றதும் அநியாயமானதுமான சமூகக் கட்டுப்பாடுகளைத் தமது வாழ்க்கையினின்றும் உதறித் தள்ளினார்.

பாரதியார் விதைத்த சிறுசிறு விதைகள் எல்லாம் பெரும்பயிர்கள் ஆயின அவர் இறைத்த சிறு நீர்த்துளிகள், பெரிய வெள்ளமாக மாறிவிட்டன. ஓயாமல் உழைப்பதே மேதைக்கு இலட்சணம் என்றும், அலுத்துக்கொள்ளாமல் செயல் செய்வதே பக்தனுக்கு அடையாளம் என்றும் சொல்லுவதுண்டு. பாரதியார் மேதாவி; அவர் அருமையான தேசபக்தர். எனவே, சலிக்காத உழைப்புக்கும் தடையே இல்லாத செயலுக்கும் கேட்கவும் வேண்டுமா?

பாரதியார் தமது மூர்த்திப் பிரதாபத்தின் மூலமாகவே பலருடைய சந்தேகங்களைத் தீர்த்துவிடுவார். நினைத்துக்கொண்டு வந்த சந்தேகமெல்லாம் அவரது திவ்யமான முகப்பொலிவைக் கண்டதும், எங்கேயோ மறைந்து ஒளிந்துகொள்ளும். நெறி தவறியவர்களும் அற்பர்களுந்தாம் அவரைக் கண்டு அஞ்சுவார்கள். மற்றவர்களோ, அவருடைய தேஜோமயமான முகத்தைப் பருகிக்கொண்டே இருக்காலாமே என்று எண்ணுவார்கள்.

வா, வா என்று அழைக்கும் அவருடைய முகத்தைக் கண்டு, குழந்தைகள் கூத்தாடுவார்கள. நாணிக் கோணி நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் பெண்மணிகூடப் பாரதியாரின் முன்னிலையில், நாணிக்கோணி நடக்க மாட்டாள். எதிலும் இயற்கை எழிலோடு நட என்று சொல்வது போல இருக்கும் அவரது முகம். சிக்கலான சந்தர்ப்பங்களில் அது சிறந்த வழிகாட்டியாக இருந்தது என்றால் மிகையாகாது.

இவ்வாறாக, பாரதியார், மக்களுக்குத் தெரிந்த, தெரியாத சாதனங்களின் மூலமாகத் தமது இலட்சியமாகிய ‘பூரண மனிதனை’த் தமிழர்களின் உள்ளங்களில் உருவகப்படும்படியாகச் செய்து வந்தார். வெயில், பயிர்களுக்கு உயிர் கொடுப்பதைப் போல, பாரதியார், தமிழர்களின் உள்ளத்தை மலர்ந்து விரியச் செய்தார்.

தமிழர்களைத் தக்க சமயங்களில் பட்டவர்த்தனமாக ஏசுவார்; உடனே அவர்களை அணைத்துக் கொஞ்சுவார்; ‘இதைச் செய்ய மாட்டீர்களா-‘ என்று கெஞ்சுவார். செய்யாவிட்டால், அழிவு உறுதி என்று உறுமுவார்; என்ன இருந்தாலும், தமிழனுக்கு நிகராக யார் இருக்க முடியும் என்ற உண்மையை, விளையாட்டுப் போல, அவனது உள்ளத்தில் ‘இஞ்செக்ஷன்‘ செய்திடுவார். எத்தனையோ நூற்றுக்கணக்கான தமிழர்களை, நேர்முகமான சம்பாஷணை முறையால், அவர் அடியோடு மாற்றியிருக்கிறார்.

தாம் நடு வயிதிலேயே மறைத்துவிடுவோம் என்பது அவருக்குத் தெரியுமோ என்னவே, கையில் அகப்பட்ட சந்தர்ப்பங்களைக் கைநழுவிப் போகும்படியாக விட்டு விட்டு, சந்தர்ப்பமே வாய்க்கவில்லையே என்று பொய்யாக உளறும் மனிதர்களை போல அவர் செய்ததே கிடையாது. செய்ய வேண்டியதை இன்றே செய்வதும், அதிலே இன்னே (இப்பொழுதே) செய்வதுந்தான் பாரதியாரின் சுபாவம். நாளை என்பது நமது நாள் அல்ல வென்றும், அது நமனது நாள் என்றும் அவர் கபிலரைப் போல் முடிவு செய்துகொண்டார் போலும்.

அதனாலேதான், முப்பத்தெட்டு வயதில் அவர் மறைந்த போதிலும் அவர் செய்த வேலை அபாரமாகக் கண்ணில் படுகிறது.

பாரதியார் எழுதியன யாவும் தங்கமாக இருக்க வேண்டும் என்பதில்லை என்றும், அவற்றில் தங்கம், தாமரம், தூசி, ‘துடைப்பக் கட்டை‘ எல்லாம் சேர்ந்துதான் இருக்கின்றனவென்றும் பலர் ஏளனமாகப் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். இருக்கலாம். அதனாலென்ன? ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உபயோகமாகும்பொழுது, ஏற்றத்தாழ்வு கற்பித்து, ஏளனம் செய்வதற்கு அர்த்தமுமில்லை, அவசியமும் இல்லை.

தங்கத்தைத் தூசியைப் போட்டு மூடி மறைத்தால் தான் தங்கம் பறி போகாமல் இருக்க முடியும். மேலும், ஜனசமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளால், பல்வேறு ருசி படைத்த மக்கள் இருப்பர்களாகையால், குற்றமில்லாத நாகரித்துக்குப் பங்கம் ஏற்படாத முறையில், எல்லாருடைய ருசிகளுக்கும் ஏற்ற சுவைப் பொருள்களைக் கொடுப்பதுதான் நியாயமாகும்.

வேப்பிலை கசக்கிறது என்பதற்காக, அதைப் பயிர் செய்யலாகாது என்று தடுத்து, ஒட்டகத்தின் வாயில் மண்ணைப் போடுவதா? அவ்வாறாயின், ஒட்டக இனத்தையும் அழித்துவிடத்தான் வேண்டும். இந்த மாதிரிப் போய்க்கொண்டிருந்தால், படைப்பில் மனிதக் கூட்டத்தான் மிஞ்சும். மனிதக் கூட்டத்திலும், உண்ணும் உணவு செரிமானமாகாத நோயாளிகள்தாம் மிஞ்சுவார்கள்; அல்லது ஆகாரமே வேண்டா என்று அடம் பிடிக்கும் பேர்வழிகள் தாம் மிஞ்சுவார்கள்.

தாம் எதை எழுதினாலும் எதைப் பேசினாலும் அதற்குத் தேவை இருப்பதை உணர்ந்துதான் பாரதியார் அவ்வாறு செய்திருப்பார். ஆட்டுக்கு வால், ஆண்டவன் அளந்துதான் வைத்திருப்பான் என்று சொல்லுவார்கள், அதைப் போலவே, பாரதியார் எதையும் நிதானித்து, தீர்க்கமாக யோசித்தத்தான் செய்வார்.

உலகத்திலே மகான்கள் என்று போற்றப்படும் மனிதர்கள் எல்லாக் காரியங்களையும் தவறு இல்லாமல் செய்துவிடுகிறார்களா? இமயத்தைப் போன்ற பிழைகளைக் செய்தேன் என்று காந்தி சொல்லவில்லையா? அதற்காக அவருடைய ‘மகாத்மா‘ பட்டத்தை, அவரிடமிருந்து பறிமுதல் செய்துவிட்டார்களா? நோயாளிகள் பலரைக் குணப்படுத்த முடியாமல் போனதற்காக, வைத்தியரின்மீது கொலைக்குற்றம் சாட்டுவதா? சில சமயங்களில், உயிர் வாழ்தல் அவசியமாகும்; வேறு சில சயங்களில், உயிர் வாழ்தல் அவமானமாகும்.

எனவே, மட்டம் என்றும் உயர்வு என்றும் பாகுபாடு செய்து, பாரதியாரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் சித்திரவதை செய்வதில் பயன் எதுவும் எல்லை; பொருளுமில்லை. சில பாட்டுகள் குழந்தைகளுக்கு ஆகும்; சில சோம்பேறிகளுக்குப் பிடிக்கும். மற்றும் சில வீரர்களுக்கு நல்ல விருந்தாக அமையலாம் வேறு சில, பெண்மணிகளுக்குப் பஞ்சாமிர்தமாக இருக்கலாம். சிலவற்றைச் சங்கீத இரசிகர்கள் பாடிப்பாடிப் பரவசமடையலாம். படைப்பு ஒரேமுகம் கொண்டதாயிருந்தால, ருசியும் ஒன்றாக இருக்கலாம். அப்படி இல்லாத காரணத்தினாலே, பாரதியாரின் பலவகைப் படல்களும் அவ்வப்போது தேவையாக இருப்பபதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

பாரதியார் பிறந்த காலத்தில் தமிழ்மொழியும் ஜனசமூகமும் அவ்வளவாக நல்ல நிலைமையில் இல்லை. ஏங்கிக்கிடந்த தமிழர்கள், தூங்கிக் கிடந்த தமிழ்மொழி- இதுதான் பாரதியார் கண்டது. இந்த நிலையிலிருந்த தமிழர்களை மாற்றி, ஊக்கமும் உள்வலியும் ஏற்படும் படியாகச் செய்வது மிகவும் அசாத்தியமான வேலையாகும். ஆனால், இந்த வேலையைப் பாரதியார் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.

தமது கலைத்திறனாலும் கவிதை வெள்ளத்தாலும் பாரதியார் இந்தக் காரியத்தை எளிதிலே சாதித்துவிட்டார்; உணர்ச்சிப் பெருக்கு என்ற வெள்ளத்தில் தமிழர்களை மிதக்கும்படியாகச் செய்தார்; விவேகம் என்ற அரிய சாதனத்தைக்கொண்டு வாழ்க்கைச் சம்பவங்களை அளந்து எடை போட வேண்டும் என்பதற்கு வழி காண்பித்தார்.

தமிழன் தலைநிமிர்ந்து நடக்கும்படியாக, அவனை ஆண்மகனாக ஆக்கிய பெருமை, பெரும்பான்மையில் பாரதியாரைச் சேர்ந்ததாகும்.

பாரதியாருக்கு மேல்நாட்டு இலக்கியத்தில் நிபுணத்துவம் உண்டு. நம் நாட்டு மக்களின் இயல்பையும் நன்கு அறிவார். எனவே, அவர் எழுதியனவெல்லாம் ஒட்டுமாங்கனியைப் பொல அபரிமிதமான ருசி படைத்தவையாக ஆகிவிட்டன.

பாரதியாரின் கவிதைக்கு, உலக இலக்கியத்தில் எந்த இடம் கிடைக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம். மனிதனுடைய மூலாதாரமான உணர்க்சிகளைக் கணக்கெடுத்து, அவைகளைப் பரிமளிக்கச் செய்ய வேண்டும் என்பது பாரதியாரின் இலட்சியமாகும். எனவே, அவருடைய கவிதைக்குத் ‘தேசியம்‘ என்ற எல்லையைக் கோலி, அதைப் கட்டுப்படுத்த முடியாது.

சிறப்பாகத் தமிழன் பாரதியாரின் கண்ணில் பட்டாலும், மனிதன் என்ற வகையிலேதான், பாரதியார் அவனைப் பார்த்தார். தமிழன் என்பதற்குப் பதிலாக, எந்த நாட்டினுடைய பெயரைக் கொடுத்தாலும், பாரதியாரின் கவிதை, அந்த நாட்டுக்கும் பொருத்தமுள்ளதாக இருக்கும். எனவே, அவர் சர்வதேசக் கவி; அதாவது உலக மகாகவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

இப்பொழுது மனித வர்க்கம் மாறிக்கொண்டு போவதைப் பார்த்தால், பாரதி சகாப்தம் என்பதற்கு ஐந்நூறு வருஷத்திற்குக் கறையாமல் ஆயுள் காலத்தை நிர்ணயிக்கலாம்.

எந்த நாட்டானும் தனது என்று கொஞ்சிப் பாராட்டக்கூடிய பாரதியாரின் கவிதையைப்பற்றி அதிகமாக என்ன சொல்வதற்கு இருக்கிறது?

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !!
வாழிய பாரத மணித்திரு நாடு !!!
வந்தே மாதரம்.

                 
20

Website Designed by Bharathi Sangam, Thanjavur