தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்
(தொடர் சொற்பொழிவுகள்
)

1986 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு நாள், தஞ்சாவூர் செல்வம் நகரில் உள்ள சேக்கிழாரடிப்பொடி சைவசித்தாந்த கலாநிதி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களுடைய வீட்டில் வழக்கம்போல் அவர், வழக்கறிஞர் சிவத்திரு ப.அருள்நமச்சிவாயம், நான் ஆகிய மூவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது தமிழ் அறிஞர்களைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழ்த் தாத்தா ஐயருடைய 'மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம்' 'என் சரித்திரம்' ஆகிய நூல்களைப் பற்றிப் பேசினோம். ஐயர் எழுதிய வெளியிட்ட பலருடைய சரித்திரங்களைப் பற்றியும் பேசினோம். அப்போது அருள் நமச்சிவாயம் அவர்கள் இன்றைய தலைமுறையினருக்கு இவ்வரலாறுகள் தெரியாதே என்றார். அப்போது நாங்கள் மூவரும் தெரியவைக்கவேண்டியது அவசியம், தெரியவைப்போம் என்றும் முடிவு செய்தோம்.

தமிழுக்கு ஆக்கம் செய்து மறைந்த பெரியார்களுடைய வரன்முறையான வாழ்க்கை வரலாறுகளை சொற்பொழிவுகளாக நிகழ்த்துவது; அச்சொற்பொழிவுக்கு ஐயர் அவர்களுடைய மகாவித்வானின் சரித்திரத்தை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை சரியான தகவல்களுடன் வரலாறு கூறவேண்டும். அவர் தமிழுக்குச் செய்த ஆக்கப்பணிகளைக் கூற வேண்டும். ஆக்கம் என்பது நூல் இயற்றுதல், நூல்கள் அச்சிடுதல், உரைகள் நிகழ்த்துதல், பாடஞ்சொல்லுதல் போன்ற எந்த முறையிலும் இருக்கலாம். சொற்பொழிவு 1.15 மணி முதல் 1.30 மணி நேரத்துக்கு இருக்கலாம். உரை முடிந்ததும் அவையோர் வினா எழுப்பலாம். அவற்றுக்கு உரையாளர் விளக்கம் சொல்லவேண்டும். அவையில் உள்ளோர் பேசப்படும் பொருள் பற்றி தங்கள் கருத்துக்களையும் கூறலாம். இவை 20 நிமிடங்களுக்குள் நிகழவேண்டும். உரையாற்றுவோர் தங்களுடைய உரைகளைக் கட்டுரைகளாக எழுதித் தரவேண்டும். ஒரு பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் கருத்தரங்க உரையாக அது அமைய வேண்டும். இப்படியாக நாங்கள் அதை வடிவமைத்தோம். பேசப்படும் தமிழ் அறிஞர் மீது மதிப்புடைய தக்கோரை வைத்து உரை நிகழ்த்த வைப்பது என்றும், பேச ஒருவரும் கிடைக்காதபோது நாங்களே படித்துப் பேசுவது என்றும் முடிவு செய்தோம். இச்சொற்பொழிவுகளுக்கு "தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்" எனப் பொதுப் பெயர் சூட்டினோம்.

முதல் சொற்பொழிவை சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன், 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடை ஞாயிறு அன்று மாலை 6.15 மணிக்கு "மாதவச் சிவஞான யோகிகள்" பற்றி நிகழ்த்தி இத்தொடரைத் தொடங்கிவைத்தார். அன்று முதல் இன்று வரை இச்சொற்பொழிவுகள் தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவில் உள்ள சுப்பையா நாயுடு பள்ளியிலேயே நடந்துவருகின்றன. இப்பள்ளியின் நிர்வாகத்தினர் எங்களுக்கு இலவசமாக இடம் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய நல்லுதவி இல்லாமல் இதை நாங்கள் சாதித்திருக்க முடியாது. பள்ளி நிர்வாகத்துக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றி.

முதல் சொற்பொழிவு மார்ச் மாதம் கடை ஞாயிறன்று (30.03.1986) நடந்தது. ஒரத்தநாட்டில் செயல்பட்ட நற்சிந்தனை மன்றத்தினர் தாங்கள் கலந்துகொள்ள வசதியாக வேறொரு ஞாயிறன்று நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆகவே இரண்டாம் சொற்பொழிவு முதல் ஒவ்வொறு ஆங்கில மாதம் ஈற்றயல் ஞாயிறன்று மாலை 6.15 மணிக்குத் தவறாமல் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதம் கூட சொற்பொழிவு நடக்காமல் இருந்ததில்லை. இச்சொற்பொழிவுகள் தஞ்சை பாரதி சங்கம் சார்பில் நடத்தப்படுகின்றன. 20.02.2011 அன்று 300 ஆவது சொற்பொழிவை, அதாவது 25ஆம் ஆண்டின் நிறைவுச் சொற்பொழிவை தொடக்கச் சொற்பொழிவை நிகழ்த்திய எங்கள் ஆசிரியர் சேக்கிழாரடிப்பொடி அவர்களே 'டாக்டர் கிருஷ்ணசிவராமன்' அவர்கள் பற்றி நிகழ்த்தினார்கள்.

இவ் இருபத்தைந்து ஆண்டுகளில் பண்டித வித்வான் தி.வே.கோபாலையர், பேராசிரியர் மு.அருணாசலம் போன்ற பேரறிஞர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இச் சொற்பொழிவுகள் நூல்களாக வெளியிட வேண்டும். என்பது எங்கள் நோக்கம். 1986 ஆம் ஆண்டுச் சொற்பொழிவுகள் மட்டும் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் அவர்களால் மணிவாசகர் நூலகம் வாயிலாக நூலாக வெளியிடப்பட்டன. அவருக்கு எம் நன்றி. சொற்பொழிவுகளை நூலாக்கச் செப்பம் செய்து கொடுத்தவர் புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள். அதன் பின்னர் நடந்த சொற்பொழிவுகளை நூலாக்கம் பெறவில்லை. பலர் உரை நிகழ்த்தினரேயன்றி கட்டுரையாக எழுதித் தரவில்லை. எஞ்சியுள்ள கட்டுரைகளை வெளியிட முயல்கிறோம்.

இச்சொற்பொழிவுகளில் ஒருவரே பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியதுண்டு. ஒருவரைப்பற்றியே பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியதும் உண்டு. இச்சொற் பொழிவுகளுக்கு 60 பேர் வந்ததுமுண்டு, மூன்று பேர் மட்டுமே வந்ததுமுண்டு. வருபவர்களுடைய எண்ணிக்கை பற்றிக் கவலையின்றி இக்கூட்டங்கள் நடந்துவருகின்றன.

பழைய பேருந்து நிலையம் எதிரில் யூனியன் கிளப் நுழைவு வாயில் அருகில் சொற்பொழிவு விபரங்கள் பற்றிய விளம்பரத் தட்டியானது தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

இச்சொற்பொழிவுகளைப் பற்றியே ஆய்வு செய்து திருமதி. ஜெயலட்சுமி என்னும் பள்ளி ஆசிரியர் எம்.பில். பட்டம் பெற்றார்.

ஒவ்வொரு மாதமும் ஈற்றயல் ஞாயிறன்று மாலை 6.15 மணிக்கு சுப்பையா நாயுடு பள்ளிக்குள் நுழைந்தால் யாராவது ஒருவர் ஒரு தமிழ் மூதறிஞர் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்.

22.01.2012 அன்று வரை நடந்த 311 சொற்பொழிவுகளின் பட்டியல் இப்போது வெளியிடப்படுகிறது.


வீ.சு.இராமலிங்கம்
பாரதி சங்கம்,
தஞ்சாவூர்

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur